2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு… சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் கூட்டம்!
2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு… சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் கூட்டம்!
சென்னை 06 அக்டோபர் 2026 நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில், அனைத்து மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள், ஒன்றியங்கள் மற்றும் பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்ற பிரமாண்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் என 2,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் காணப்பட்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், நற்பணி இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுடன் அன்புடன் கலந்துரையாடினார்.
அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடி, அவர்களின் கருத்துகள் மற்றும் அனுபவங்களை கேட்டறிந்ததுடன், அனைவருடனும் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். சிவகார்த்திகேயனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே அறிவுத்திறன் மற்றும் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு புத்தகக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல்வேறு தலைப்புகளில் இடம்பெற்றிருந்த புத்தகங்களை ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டதுடன், தங்களுக்கு பிடித்த புத்தகங்களையும் வாங்கி மகிழ்ந்தனர்.
புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த முயற்சியில், முதல் புத்தகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஏராளமான நிர்வாகிகளும் ரசிகர்களும் புத்தகங்களை வாங்கி, இந்த முயற்சிக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
நற்பணி செயல்பாடுகளுடன் சமூக அக்கறை, அறிவு வளர்ச்சி மற்றும் வாசிப்பு பழக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. உற்சாகம், அன்பு மற்றும் சமூக அக்கறையுடன் நடைபெற்ற இந்த பிரமாண்ட சந்திப்பு, சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் செயல்பாடுகளில் முக்கிய நிகழ்வாக அமைந்தது.











