காவேரி மருத்துவமனையில் சாதனை! சிறு குழந்தைகளுக்கு வெற்றிகரமான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை.

சென்னை 27 மார்ச் 2022 காவேரி மருத்துவமனையில் சாதனை! சிறு குழந்தைகளுக்கு வெற்றிகரமான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை
- கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்த 2 வயது சிறுவன் மற்றும் 4 வயது சிறுமிக்கு உயிருள்ள தானமளிப்பவரிடமிருந்து பெறப்பட்ட கல்லீரல்கள் பொருத்தப்பட்டன
- இந்த இரு குழந்தைகளின் பெற்றோர்களே இவர்களுக்கு கல்லீரலை தானமாக கொடுத்திருக்கின்றனர்.
சென்னை, 26 மார்ச், 2022: தமிழ்நாட்டில் பிரபல பன்முக சிகிச்சை மருத்துவமனைகள் குழுமமாக புகழ் பெற்றிருக்கும் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை காவேரி மருத்துவமனை, உயிருள்ள தானமளிப்பவர்களிடமிருந்து பெறப்பட்ட கல்லீரலைக் கொண்டு இரு சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்தியிருப்பதை இன்று பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.
சென்னைக்கு அருகிலுள்ள அரக்கோணத்தைச் சேர்ந்த 4 வயதுள்ள ஒரு பெண் குழந்தையும் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 2 வயதான ஒரு சிறுவனும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர். இந்த இரு சிறார்களுக்கும் முறையே கல்லீரல் கோளாறு மற்றும் கல்லீரல் செயலிழப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது.
கல்லீரல் நோய் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை மையத்தின் தலைவரும் மற்றும் முதுநிலை நிபுணருமான டாக்டர். இளங்குமரன், இந்நோயாளிகளின் நிலைமைகள் மற்றும் வழங்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி கூறியதாவது: “4 வயதான சிறுமிக்கு ஒரு அரிதான மரபியல் கோளாறு இருப்பது நோயறிதல் சோதனையில் கண்டறியப்பட்டது; கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை வழியாக மட்டுமே இதனை குணப்படுத்த இயலும். மதிப்பீட்டு சோதனைகளுக்குப் பிறகு, இச்சிறுமியின் தாய் தானமளிக்கப் பொருத்தமானவராக இருப்பது கண்டறியப்பட்டது.
அவரிடமிருந்து பெறப்பட்ட கல்லீரலை இந்த உறுப்புமாற்று சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது மற்றும் அது தொடர்பான அனைத்து பாதிப்பு நிலைகளுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 2 வயதான சிறுவனுக்கு ஒரு வார காலத்திற்கு காய்ச்சலும், மஞ்சள் காமாலை பாதிப்பும் இருந்திருக்கிறது. எனவே, அதன்பிறகு உயர்நிலை சிகிச்சை அவசியத்தைக் கருதி, எமது மருத்துவமனைக்கு அக்குழந்தை பரிந்துரைக்கப்பட்டது. கல்லீரல் செயலிழப்பு இக்குழந்தைக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டான். தொடர்ச்சியான மருந்துகளின் மூலம் இச்சிறுவனுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அதன்பிறகு, இவன் உணர்விழந்த காரணத்தால், அவசரமாக கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் உருவானது. அவனது குடும்பத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளுக்குப் பிறகு இச்சிறுவனின் தந்தை, தானமளிக்கப் பொருத்தமானவராக இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள், உயிருள்ள தானமளிப்பவரான அவரது தந்தையிடமிருந்து பெறப்பட்ட கல்லீரலைக் கொண்டு இந்த உறுப்புமாற்று சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. எவ்வித சிக்கல்களும் இல்லாமல், இச்சிறுவன் குணமடைந்து பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறான். ‘சிகிச்சைகளையும் கடந்து ஆதரவுக்கரம் நீட்டுவது’ என்பது எமது குறிக்கோளாக இருந்து வருகிறது. உறுப்புமாற்று சிகிச்சை செயல்பாடுகளிலும் எமது குறிக்கோளை நாங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.”
உறுப்புமாற்று சிகிச்சை செய்யப்பட்ட இந்த இரு குழந்தைகளும் எவ்வித சிக்கல்களும் இல்லாமல் முழுமையாக குணமடைந்திருக்கின்றனர் மற்றும் இப்போது இயல்பான குழந்தைகளைப்போல சுறுசுறுப்பாக விளையாடுகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சரது விரிவான உடல்நலக் காப்பீடு திட்டத்தின் கீழ் அரக்கோணத்தைச் சேர்ந்த 4 வயது பெண் குழந்தைக்கு இந்த உயர் சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவனுக்கு சிகிச்சை செலவுகளில் ஒரு பகுதியை காவேரி மருத்துவமனை ஏற்றுக்கொண்டது மற்றும் கிரவுட் ஃபண்டிங் என அழைக்கப்படும் பலர் வழங்கிய நிதியுதவியும் இக்குழந்தைக்கு கிடைத்தது.
மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி கருணாநிதி இந்நிகழ்வு குறித்து பேசுகையில், “சின்னஞ்சிறு குழந்தைகளுக்கான கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சைகள் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதற்காக டாக்டர். இளங்குமரன் மற்றும் காவேரி மருத்துவமனையின் குழுவினரை நான் பாராட்டுகிறேன். நமது நாட்டில் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை பலருக்கும் எட்டாத கனியாகவே இருந்திருக்கிறது. இன்றைக்கு உலகப்புகழ்பெற்ற அறுவைசிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மிக நவீன சாதனங்களுடன் உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கின்ற சென்னை காவேரி மருத்துவமனை, உறுப்புமாற்று சிகிச்சை சேவைகளை பலரும் பெற்று பயனடையுமாறு செய்திருக்கிறது. மாநில எல்லைகளையும் மற்றும் வசதி வரம்புகளையும் கடந்து இச்சேவை கிடைக்கப்பெறுவதை ஏதுவாக்கியிருக்கிறது. பல்வேறு ஆதாரங்களிலிருந்து பெற்ற நிதியின் மூலம் செய்யப்பட்டிருக்கும் இச்சிகிச்சைகள், இந்த சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு புதிய வாழ்க்கையை தந்திருக்கிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்ல இன்னும் தொடர்ந்து தயக்கம் காட்டுகின்ற மக்கள் மத்தியில் இந்த வெற்றிகரமான சிகிச்சை மக்கள் மனதில் நம்பிக்கை விதையை நிச்சயமாக விதைக்கும். நமது நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக இன்றைய குழந்தைகளே இருப்பதால், சரியான நேரத்தில் சரியான மருத்துவ உதவியைப் பெற அனைத்துப் பெற்றோர்களும் உறுதியோடு முன்வர வேண்டுமென்று நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். குழந்தைகளின் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.
சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும், செயலாக்க இயக்குனருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் இந்த வெற்றிகரமான உறுப்பு மாற்றுசிகிச்சை குறித்துப் பேசுகையில், “குழந்தைகளுக்கான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை செய்வது அதிக சவால்கள் நிரம்பியதாகும். உறுப்புமாற்று சிகிச்சையின் வெற்றிக்கு சரியான உட்கட்டமைப்பு வசதிகளும், மருத்துவக் குழுவினரின் சரியான, அனுபவம் மிக்க நிபுணத்துவமும் கட்டாயம் அவசியம். குழந்தைகளுக்கான கல்லீரலியலில் சிறப்பு சிகிச்சைப் பராமரிப்பானது, எவ்வித சிக்கல்களும் இல்லாமல் இக்குழந்தைகள் பாதிப்பு நிலையிலிருந்து மீண்டு குணமடைவதை உறுதி செய்வதற்காக வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு குழுவாக, கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையில் முதன்மை மருத்துவ மையமாக திகழ்வது எமது நோக்கம். இதைச் சார்ந்து, சென்னை தவிர, தமிழ்நாட்டிலுள்ள இரண்டாம்நிலை நகரங்களிலும் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சைகளை நாங்கள் வழங்கி வருவது எங்களுக்கு பெருமையளிக்கிறது. சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர்களுக்கும் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை எளிதில் தரத்தக்கதாகவும் மற்றும் மிதமான கட்டணத்தில் வழங்குவதாகவும் செய்வதே எமது தொலைநோக்குப் பார்வையாக இருக்கிறது. சிறப்பான வாழ்க்கையை வாழ உதவுவதற்காக இக்குழந்தைகளுக்கு வெற்றிகரமான, முழுமையான சிகிச்சையை வழங்கியதற்காக டாக்டர். இளங்குமரன் மற்றும் அவரது குழுவினரை நான் மனமார பாராட்டுகிறேன். கல்லீரலில் ஒரு பகுதியை அகற்றியதற்குப் பிறகு மீண்டும் வளரும் திறன் கொண்ட ஒரு உடலுறுப்பாக கல்லீரல் இருக்கிறது என்ற உண்மையை பலரும் இன்னும் அறிந்திருக்கவில்லை. இதுகுறித்து விழிப்புணர்வானது, தங்களது அன்புக்குரியவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு நிலையில் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை அவர்கள் தொடங்க உதவுவதற்காக உயிரோடு இருக்கும்போதே தானமளிப்பதற்கு குடும்பத்தினர் மனமுவந்து முன்வருவதற்கு உதவும்.” என்று கூறினார்.











