சுழல் தி வோர்டெக்ஸ் வெப் தொடர் விமர்சனம் ரேட்டிங் :- 3.75 / 5.

நடிகர் நடிகைகள் :- கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், நிவேதிதா சதிஷ், சந்தானபாரதி, பிரேம் குமார், ஹரிஷ் உத்தமன், நித்திஷ் வீரா, குமரவேல், இந்துமதி, லதா ராவ், கோபிகா ரமேஷ், எஃப் ஜே, பழனி, ஜீவா, யூசுஃப் ஹுசைன், மற்றும் பலர்.

இயக்கம் :- பிரம்மா, அனுசரண்.

ஒளிப்பதிவு :- முகேஷ்வரன்.

படத்தொகுப்பு :- ரிச்சட் கெவின்.

இசை :- சாம் சி.எஸ்

தயாரிப்பு :- வால் வாட்சர் ஃபில்ம்ஸ்.

ரேட்டிங் :- 3.75 / 5.

 

இன்றைய காலகட்டங்களில் சிறுமிகள் மீது கொடூரமாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் பற்றி ஏற்கெனவே பல கதைகள் வந்திருந்தாலும் அதை மையமாக வைத்து மாறுபட்ட வகையில் சொல்லப்பட்டிருக்கும் கதைதான் சுழல் தி வோர்டெக்ஸ்”. இணையத் தொடர்.

இந்த தொடர் ஜுன் 17 அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் இன்று வெளியாகி இருக்கிறது.

எட்டு தொடர்களாக உருவாகி இருக்கும் இந்த தொடர் எந்த வகையான சுழலை கொடுத்திருக்கிறது என்றால் மிகவும் பரபரப்பாக கொடுத்திருக்கிறார்கள்.

அந்த ஊரில் இருக்கும் சிமெண்ட் தொழிற்சாலைக்கு தொழிற்சங்கத் தலைவராக வருகிறார் ஆர் பார்த்திபன். ஊழியர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி தொழிற்சாலை முன்பு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஊழியர்களுடன் போராட்டம் செய்கிறார் ஆர் பார்த்திபன்.

அப்போது அங்கு வரும் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரேயா ரெட்டி மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் கதாநாயகன் கதிர் உள்ளிட்ட காவல்துறையினர் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஊழியர்களை அடித்து விரட்டுகிறார்கள்.

ஊரில் அன்று அங்களம்மனுக்கு மசான கொள்ளை முதல் நாள் திருவிழா ஆரம்பமாகிறது.

அன்று இரவே, சிமெண்ட் தொழிற்சாலை தீப்பிடித்து எரிகிறது.

அப்போது சிமெண்ட் தொழிற்சாலை தீ விபத்து தொடர்பாக தொழிற்சங்க தலைவராக இருக்கும் ஆர.பார்த்திபனை காவல் துறை கைது செய்கிறது.

சிமெண்ட் தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவராக இருக்கும் ஆர.பார்த்திபனின் இளைய மகள் திடீரென்று மாயமாகி விட அவரை தேடும் முயற்சியில் ஆர் பார்த்திபன் இறங்குகிறார்.

தனது தங்கையை கண்டு பிடிக்க கோயம்புத்தூரில் இருந்து தனது கிராமத்திற்கு வருகிறார் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதற்கிடையே ஆர் பார்த்திபனுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சேகரிக்கும் காவல்துறை அதிகாரிகள் ஸ்ரேயா ரெட்டி மற்றும் கதாநாயகன் கதிருக்கு அவரது மகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியான ஆதாரம் ஒன்று கிடைக்கிறது.

அந்த ஆதாரத்தின் மூலம் அவள் காணாமல் போக வில்லை கடத்தப் பட்டிருக்கிறாள்.

என்பது காவல்துறைக்கு தெரியவர, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை பல விதமான முடிச்சுகளோடு சுவாரஸ்யமாகவும் அருமையாகவும் சொல்லியிருப்பது மிகவும் அருமை.

சிமெண்ட் தொழிற்சாலை தீப்பற்றி எரிய காரணம் யார்.? தொலைந்து போன ஆர். பார்த்திபனின் மகள் கிடைத்தாரா.? கிடைக்க வில்லையா? என்பதுதான் சுழல் தொடரின் மீதிக் கதை.

காவல்துறை துணை ஆய்வாளர் சக்கரை கதாபாத்திரத்தில் கதிர் மிக அருமையாக பொருந்தியிருக்கிறார்.

அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

தொடர் முழுவதும் வரும் அவரது கதாப்பாத்திரமும் அதற்கு ஏற்ப அவர் நடித்திருப்பதும் தொடருக்கு பலம் சேர்த்திருக்கிறது.

காவல்துறை துணை ஆய்வாளர் வரும் கதாநாயகன் கதிர் தான் ஒட்டு மொத்த இன்வஸ்டிகேசனையும் நடத்தி முடிக்கிறார்.

தனக்கு மீறிய ஒரு கதாபாத்திரம் தான் என்றாலும் அதை உணர்ந்து தன்னால் இயன்ற வரை தனது கேரக்டரை பூர்த்தி செய்திருக்கிறார் கதாநாயகன் கதிர்.

ஒட்டுமொத்த கதையையும் தனது கதாபாத்திரத்தின் மூலம் தனி ஒருவனாகவே சுமந்து சென்று கரை சேர்த்திருக்கிறார் கதாநாயகன் கதிர்.

மன உழைப்பு முதல் உடல் உழைப்பு வரை கொடுத்து தனது கேரக்டரில் மிக அற்புதமாக வாழ்ந்திருக்கிறார் கதாநாயகன் கதிர்.

நாத்திகம் பேசி தொழிலாளர்களின் நலனுக்காக போராடும் ஒரு போராளியாக வரும் ஆர் பார்த்திபன் தனது கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார்.

தனது மகள் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளில் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிட்டார் ஆர் பார்த்திபன்.

இரண்டு மகள்களுக்கு தந்தையாக நடித்திருக்கும் ஆர் பார்த்திபன் மிக இயல்பாக நடித்திருக்கிறார்.

குறிப்பாக அவரது வழக்கமான நடிப்பையும், வசனத்தையும் தவிர்த்துவிட்டு நடித்திருப்பது புதிதாக இருப்பதோடு ரசிக்கும்படியும் இருக்கிறது.

தொலைந்து போன தனது தங்கையை தேடி அலையும் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை சொல்லும் போதாக இருக்கட்டும், க்ளைமாக்ஸ் காட்சியில் அவதாரமாக தோன்றுவதாக இருக்கட்டும் என தனது நந்தினி கதாபாத்திரத்தை எந்த இடத்திலும் சோர்வடைய வைக்காமல் செய்து முடித்திருக்கிறார் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.

காவல்துறை ஆய்வாளர் வரும் ஸ்ரேயா ரெட்டி, காக்கி உடையில் மிடுக்கென மிளிர்கிறார்.

‘திமிரு’ திரைப்படத்தில் நடித்த ஸ்ரேயா ரெட்டியை இன்னமும் அதே ‘திமிரு’டன் பார்க்க முடிகிறது.

தனது மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிக்காட்டும் இடங்களில் கைதட்டல் பெறுகிறார்.

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரைப்பட உலகிற்கு எண்ட்ரீ கொடுத்திருக்கும் ஸ்ரேயா ரெட்டிக்கு நடிப்பிற்கு சரியான தீனிபோடும் திரைப்படமாக அமைந்திருக்கிறது.

கோபம், பாசம், ஏக்கம், அழுகை என எல்லா உணர்வுகளையும் கடத்த வேண்டிய கதாபாத்திரத்தை மிக அருமையாக செய்திருக்கிறார்.

தனது அனுபவ நடிப்பை மிதமாக கொடுத்து அனைவரிடத்திலும் கைதட்டல் பெறுகிறார் சந்தன பாரதி.

தொழிற்சாலையில் முதலாளியின் மகனாக வரும் ஹரீஷ் உத்தமன்
காவல்துறை ஆய்வாளர் ஷ்ரேயா ரெட்டியின் கணவராக வரும்
பிரேம்குமார்,
பார்த்திபனின் மனைவி மற்றும் அவரது இரண்டாவது மகள் நிலா, இவரது தோழி,
காவல்துறை ஆய்வாளர் ஸ்ரேயா ரெட்டியின் மகனாக வந்த அதிசயம், பார்த்திபனின் தம்பியாக வரும் இளங்கோ குமரவேல், இவரின் மனைவியாக லதா ராவ், ஹரீஷ் உத்தமனின் தந்தை கோவில் பூசாரி என திரைப்படத்தில் நடித்த சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் உற்று நோக்க வைத்துவிட்டனர்.

இந்தத் தொடரை தேர்வு செய்த அனைத்து
கதாபாத்திரங்களின் தேர்வு மிக மிக அருமை.

சாம் சி.எஸ் பின்னணி இசையில்தான் எப்போது முன்னணி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.

அவரது பின்னணி இசை கதையின் வேகத்தையும் விறுவிறுப்பையும் அதிகரித்திருக்கிறது.

சாம் சி எஸ் அவர்களின் பின்னணி இசை மேஜிக் இப்படத்திலும் நிகழ்ந்திருக்கிறது.

திருவிழாவில் ஆட்டம் போட வைக்கவும் செய்திருக்கிறார், சில இடங்களில் பயமுறுத்தவும் செய்திருக்கிறார். மிரட்டலான இசையை கொடுத்து சுழலுக்கு தூணாக நின்றிருக்கிறார் சாம் சி எஸ்.

முகேஷ்வரனின் ஒளிப்பதிவு பிரம்மாண்டமாக உள்ளது.

மலைப்பகுதியின் அழகையும், இரவு நேர காட்சிகள் மற்றும் மயானகொள்ளை திருவிழா காட்சிகளை திரைப்படமாக்கிய விதம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட லைட்டிங் அனைத்தும் கவனம் ஈர்க்கிறது.

ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு மெனக்கெடலோடு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.

திருவிழா, மலை குவாரி காட்சிகளை பிரம்மிப்பாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.

ரிச்சர்ட் கெவினின் எடிட்டிங்க் ஷார்ப்பாக இருப்பது கூடுதல் பலம்.

எட்டு தொடர்களையும் மொத்தமாக பார்த்தால் சுமார் ஜந்து மணி நேரம் ஆகிறது.

ஆனால், அந்த ஜந்து மணி நேரம் எப்படி போனது என்பதே தெரியாதபடி காட்சிகளை மிக கன கச்சிதமாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.

இந்த தொடர் முழுவதையும் இயக்கிய பிரம்மா மற்றும் அனுச்சரண் இருவரையும் அதிகமாகவே பாராட்டலாம்.

ஒன்பது நாட்கள் நடைபெறும் திருவிழாவை காட்சிப்படுத்திய விதமாக இருக்கட்டும், விசாரணை செல்லும் விதமாக இருக்கட்டும் என கதையை ஓட்டம் பிடிக்க வைத்ததில் இவர்களது இயக்கம் பெரும் பலம் தான்.

சந்தன் குமாரின் கதை மிக சாதாரணமாக இருந்தாலும், அதற்கு இயக்குநர்கள் பிரம்மா.ஜி மற்றும் அனுசரண் அமைத்த திரைக்கதை மற்றும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது.

மொத்தத்தில் இந்த சுழல் தி வோர்டெக்ஸ்” வலை தொடர் நிச்சயம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும்.