விஜய் ஆண்டனி நடித்த கோடியில் ஒருவன் திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனுக்குக் குவியும் வரும் பாராட்டுகள்!

சென்னை 17 செப்டம்பர் 2021 விஜய் ஆண்டனி நடித்த கோடியில் ஒருவன் திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனுக்குக் குவியும் வரும் பாராட்டுகள்!

இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் ‘ஆள்’, ‘மெட்ரோ ‘ படங்களுக்குப் பிறகு மூன்றாவதாக விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்கியுள்ள படம் ‘கோடியில் ஒருவன்’.

இப்படத்திற்குத் திரை ரசிகர்கள் மட்டுமல்ல கற்றவர்கள் மூத்தவர்கள் குடும்பத்துப் பெரியவர்கள் மத்தியிலும் கூட நல்ல வரவேற்பு உள்ளது.

ஏராளமானவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு இயக்குநரை பாராட்டுகிறார்கள்.

அவர்களின் கருத்துக்கள் வழக்கமான சினிமா பார்த்த ரசிகர்களின் கருத்துகளாக இல்லாமல் வேறு விதமாகவும் ஆழமாக இருக்கிறது என்று இயக்குனர் வியக்கிறார்.

அப்படி ஒருவர் பேசும்போது கூறுகிறார்,

“ஒரு மனிதனுக்கு விடுதலை என்பது கல்வியால்தான் வரும்.

ஒரு மனிதனுக்கு விடுதலை தருகிற அந்தக் கல்வியை முதலில் அவனைப் பெற்றெடுத்த தாய் மூலம் கற்கிறான்.

அந்தக் தாய்தான் ஒரு மனிதனுக்கு முதல் ஆசிரியராக இருந்து கற்றுக் கொடுக்கிறாள்.

அவளிடம் கற்றதை அடிப்படையாக வைத்துக் கொண்டு அவன் மேலும் கற்கிறான்.

பலருக்கும் கற்றுக் கொடுக்கிறான்.

கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறுவார்கள்.

பழந்தமிழ் இலக்கியமான ‘நான் மணிக்கடிகை’யில் ஒரு பாடல் வரும்.

‘திரி அழல் காணின், தொழுப; விறகின் எரி அழல் காணின், இகழ்ப; ஒரு குடியில் கல்லாது மூத்தானைக் கைவிட்டு, கற்றான் இளமை பாராட்டும், உலகு: என்ற ஒரு பாடல் வரும் அதன் பொருள் என்ன தெரியுமா?

விளக்கின் திரியில் இருந்து வெளிப்படும் அழல் அதாவது தீ சிறியதாக இருந்தாலும் அதை வணங்குவர்.

விறகில் எரியும் சுடர் பெரியதாக இருந்தாலும் மக்கள் அதை வெறுப்பர்.

அவ்வாறே ஒரு குடும்பத்தில் படிக்காத மூத்தவனை விட கற்ற இளையவனையே அனைவரும் மதித்துப் போற்றுவர்.

மூத்தோன் இருந்தாலும் இளையவன் கல்வி கற்றவனாக இருந்தால் அவனைத்தான் இந்த உலகம் மதிக்கும் என்பது இதன் பொருள்.

இப்படிக் கல்வியின் மேன்மை பற்றி ஆனந்தகிருஷ்ணன் இந்தப் படத்தில் அழகாக கூறியிருக்கிறார்.

படத்தில் பல செய்யுள்கள் நினைவூட்டப் படுகின்றன.

அதுமட்டுமல்ல பொதுச் சேவை பற்றியும் இப்படத்தில் காட்டியுள்ளார்.

பொதுவாகப் பொதுச் சேவைக்கு வருபவர்கள் எதிர்பார்ப்புகள் இல்லாமல் பேராசை இல்லாமல் இருக்க வேண்டும்.

மக்களுக்காக பொதுச் சேவை செய்பவர்கள் சம்பளம் வாங்கக் கூடாது.

அவர்களுக்கு என்று எந்த எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது .

அந்த பொதுப்பணி அப்போதுதான் சுதந்திரமாகவும் சுத்தமாகவும் இருக்கும்.

இப்போது நம் கண் முன்னே பார்க்கிறோம்.

அரசு எவ்வளவோ ஏழை மக்களுக்கும் குடிசைப் பகுதிகளுக்கு பின் தங்கிய இடங்களுக்கும் முன்னேற்ற வேண்டும் என நிதி ஒதுக்கினாலும் இடையில் உள்ளவர்கள் அதை அடித்துக்கொண்டு போய் விடுகிறார்கள்.

ஒரு சாதாரண கவுன்சிலர் கூட தன்னால் எவ்வளவு பணம் அடிக்க முடியும் என்று பார்க்கிறான்.

அவனது கையாள்கள் கூட அரசாங்கப் பணத்தை சுரண்டுகிறார்கள்.

இப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதை இந்த படத்தில் அழகாகக் கூறுகிறார்.

இன்னும் ஏராளமான விஷயங்களை மறைமுகமாகக் கூறியுள்ளார்.

‘கோடியில் ஒருவன்’ ஒரு சாதாரண பொழுதுபோக்கு படம் அல்ல.

அண்மைக் காலங்களில் வந்துள்ள படங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான முக்கியமான ஒரு படம் ‘மக்களுக்கு நல்ல கருத்தைச் சொல்லும் படம்.

அதனால்தான் நான் இந்தப் படத்தை நான் பாராட்டுகிறேன்.

“இவ்வாறு அந்த பெரியவர் கூறியிருக்கிறார்.

இப்படி எதிர்பாராத இடங்களிலிருந்து வரும் கருத்துகளும் வரவேற்பும் இயக்குநரையும் படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.