Friday, June 18
Shadow

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாடலாசிரியர் முருகன் மந்திரம் வாழ்த்துக் கவிதை!

சென்னை 07 மே 2021

*முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு
பாடலாசிரியர் முருகன் மந்திரம்
வாழ்த்துக் கவிதை!*

தெற்கே
திராவிடமே

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”
என்ற ஒற்றை வாக்கியத்திற்குள்
ஓராயிரம் புதிய வரலாறுகளை
படைக்க வந்த வல்லவனே…
வள்ளுவனே…!

தெரிந்தே தான்
உனக்கு ஸ்டாலின் என்று
பெயர் வைத்திருக்கிறார்,
கலைஞர்.

ஆம்,
ஸ்டாலின்கள் பாசிசத்தை
வீழ்த்தப் பிறந்தவர்கள்.

தமிழகம் மட்டுமல்ல…
இந்தியாவே இப்போது
உன்னை எதிர்பார்க்கிறது.

பூச்சிகளாய் புழுக்களாய்
நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
இந்தியக் குடிமக்கள்…
தெற்கைத் தான்
நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

வடக்கின்
வாடிய முகங்கள்
அத்தனையும்
தெற்குநோக்கி
பார்த்துக்கொண்டிருக்கிறது.

வடக்கின்
பாசிசத்தால் கட்டப்பட்ட
கைகள் அத்தனையும்
தெற்கு நோக்கி
கும்பிட்டுக்கொண்டிருக்கிறது.

பகுத்தறிவே
எம் தமிழ் நிலத்தின்
பண்பாடு என்பதை
இந்தியாவைத் தாண்டி
உலகுக்கே நீ
உணர்த்தி இருக்கிறாய்.

ஜாதகம், ஜோசியம், ராசி, ராசி பலன்….

அத்தனை
மூடநம்பிக்கைகளையும்
தனியொருவனாய்
குப்பையில் அள்ளி
வீசி இருக்கிறாய்.

பெருங்கிழவன் பெரியாரின்
ப்ரியத்துக்குரிய பேரனே…
பேரறிஞர் அண்ணாவின்
பெருமைமிகு தம்பியே…
எங்கள் கலைஞரின்
புரட்சிப் புதல்வனே…

உன்னை
உளமார வாழ்த்துகிறேன்
உடன்பிறப்பே.

தமிழகமே
உன் பின்னால் இருக்கிறது.
அநீதிகளை அடித்து நொறுக்கு.

மதத்தை வைத்து
மடத்தனங்கள் செய்து
மக்களை ஏய்த்து
வன்முறை வெறியாடி
இரத்தம் குடிக்க நினைப்போரை
இரக்கமின்றி சிறைக்கனுப்பு.

வெளியில் வந்து மீண்டும்
அட்டூழியம் செய்யாதிருக்க
நீயே பொறுப்பு.

சாதியை வைத்து
சண்டித்தனங்கள் செய்து
கொலைகளைச் செய்வோரை
கூட்டமாய்
கூண்டுக்குள் அனுப்பு.

மீண்டு வந்து
மீண்டும் செய்யாதிருக்க
பாடம் சொல்லித் தருவதும்
நம் பொறுப்பு.

பெண்களின் மீது
வெறியாட்டம் நடத்துவோரை
குறி வைத்து பிடி.

இனியொருவனுக்கு
இப்படியோர்
எண்ணம் வராதிருக்க
நீ வழங்கும் தண்டனையே
முதல் படி.

பெரியாரிஸம்
அம்பேத்கரிஸம்
கம்யூனிஸம்
ஃபெமினிஸம்

மக்களுக்கான
அத்தனை இசங்களும்
நம்பும் ஒரு முதல்வரை
உன்னால்
பெற்றிருக்கிறது,
நம் தமிழகம்.

ஆனந்தக் கண்ணீரோடு
பரவசப்பட்டுக் கிடக்கிறார்கள்,
அன்னைத் தமிழ்நாட்டின் மக்கள்.

ஒரு முதலமைச்சர்
பதவியேற்பில்
இத்தனைக் கொண்டாட்டங்களை
என் வாழ்நாளில் கண்டதில்லை.

ஒரு முதல்வர்
பதவியேற்கும் நாளில்
இத்தனை மக்கள் கூடி
வாழ்த்துவதையும்
என் வாழ்நாளில் கண்டதில்லை.

ஆகப்பெரிய ஒரு
புரட்சியின் தொடக்கமாகவே
உன் பதவியேற்பை
வரவேற்கிறார்கள் மக்கள்.

ஒரு இரட்சகனைப் போல
உன்னைக் கொண்டாடுகிறார்கள்
தமிழ் மக்கள்.

எம் தலைவனே
எங்கள் முதல்வனே

எங்களின்
அனைத்து நம்பிக்கைகளையும்
இன்றே
உன் கையில் தந்துவிட்டு
நாளை முதல்
நாங்கள்
எங்கள் பிழைப்பை
பார்க்கப் போகிறோம்…

ஆம்…

நாளை முதல்
நாங்கள் பிழைத்திருப்பதை
நீ பார்த்துக்கொள்வாய்…
என்ற பெருநம்பிக்கையில்!

CLOSE
CLOSE