ஆந்திர மாநில அரசின் திரைப்பட வளர்ச்சிக் கழகத் தலைவர் பதவிக்கு பெறும் கடும் போட்டி

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த வாரம் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். விரைவில் அமைச்சரவைப் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது.

இதனிடையே, ஆந்திர மாநில அரசின் திரைப்பட வளர்ச்சிக் கழகத் தலைவர் பதவிக்கு தெலுங்கு நட்சத்திரங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலில் ஜெகன்மோகன் கட்சிக்கு பல தெலுங்கு நட்சத்திரங்கள் ஆதரவளித்தார்கள். பலர் புதிதாக அவரது கட்சியில் சேர்ந்து பிரச்சாரம் செய்தார்கள். அவர்களில் சீனியர் நடிகரான மோகன்பாபு, நடிகையான ஜெயசுதா, மற்றும் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா உள்ளிட்ட சிலர் ஏதாவது அரசுப் பதவிகளைப் பெறுவார்கள் எனத் தெரிகிறது.

நடிகை ஜெயசுதா ஆந்திர மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக நடிகர் மோகன்பாபுவும் நியமிக்கப்படலாம் என்கிறார்கள். இவையெல்லாம் டோலிவுட் வட்டாரங்களில் சுற்றி வரும் தகவல். இவை உறுதியாகுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.