சென்னை விஜயா மருத்துவமனையில் 118 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று.. மருத்துவமனையை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனையின் செயல்பாட்டினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனை, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அரசால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சரத்ரெட்டி கொரோனா பாதிப்பினால் கடந்த சில வாரங்களுக்கு முன் உயிரிழந்தார்.

இதேபோல் அதே மருத்துவமனையில் பணியாற்றிய 52 வயதான ஊழியர் ஒருவரும் சமீபத்தில் பலியானார்.

ஆனாலும் மருத்துவமனை நிர்வாகம் கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது.

இந்நிலையில் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என 118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மருத்துவமனை தற்காலிகமாக செயல்படாது என விஜயா மருத்துவமனை குழுமம் அறிவித்திருந்தார்

இந்த நிலையில் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின்படி மறு உத்தரவு வரும்வரை மருத்துவமனையின் செயல்பாட்டினை நிறுத்தி வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவமனையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.

ஏற்கெனவே, விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளிகள் மருத்துவமனைக்கு எதிா்ப்புறம் உள்ள விஜயா ஹெல்த் சென்டருக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

நிலைமை சற்று சீராகும் வரை அவசரகால சிகிச்சை உள்பட அனைத்து சிகிச்சைகளும் நிறுத்தப்படுகின்றன.