நடிகர் விஜய் நடிப்பில் ‘பிகில்’ கதைக்கு உரிமை கொண்டாடும் மற்றொரு இயக்குனர் ‼*

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தெலுங்கு பட இயக்குனர் சின்னிகுமார் என்பவர் ‘பிகில்’ இயக்குனர் அட்லி மீது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கால்பந்து வீரர் அகிலேஷ் பால் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை ’ஸ்லம் சாக்கர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கானா சினிமா கதையாசிரியர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், இந்த படத்தை உருவாக்கும் பணியில் தான் இருந்தபோது, இந்த படத்தின் கதையும் ‘விசில்’ கதையும் ஒன்று என தனக்கு தெரிய வந்ததாகவும், எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகார் அளித்துள்ளார்.