படப்பிடிப்பில் காயம் – ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரேக்குக்கு மருத்துவமனையில் திவிர சிகிச்சை.

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வசூலிலும் சாதனைகள் படைக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வரிசையில் 25-வது படம் தற்போது தயாராகி வருகிறது. இதில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடிக்கிறார். ராய்ல்ப் பியென்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக், ஜெப்ரி ரைட் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை கேரி ஜோஜி புகுனகா இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜமைக்காவில் நடந்து வருகிறது. டேனியல் கிரேக் வில்லன்களுடன் மோதும் அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

வில்லனை ஓடிச்சென்று பிடிப்பதுபோன்ற காட்சியொன்றில் டேனியல் கிரேக் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

வலியால் அலறி துடித்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் டேனியல் கிரேக்குக்கு சிறிய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 வாரங்கள் அவர் ஓய்வு எடுப்பார் என்றும் ஜேம்ஸ் பாண்ட் படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

இதையடுத்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் 8-ந் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.