எழுத்துலகில் புதிய அங்கீகாரம்… தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்!
எழுத்துலகில் புதிய அங்கீகாரம்… தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்!
சென்னை 22 செப்டம்பர் 2026 தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையுடன் பயணித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்துள்ளார்.
மரியாதை நிமித்தமாகவும், எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வது தொடர்பாகவும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்துப் பேசினர்.
சங்கத் தலைவர் இயக்குநர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் சுந்தர்ராஜன், துணைத்தலைவர் சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான இயக்குநர் செல்வபாரதி, இயக்குநர் KBB நவீன் உள்ளிட்டோர் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்து செயல்படுமாறு நிர்வாகிகள் நடிகர் சிவகார்த்திகேயனிடம் அன்புடன் வேண்டுகோள் விடுத்தனர்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார்.
திரைப்படங்களில் பாடலாசிரியராகவும் தனது எழுத்துத் திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த இணைப்பு, எழுத்தாளர்கள் சங்கத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் சில ஆலோசனைகளையும் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர்களின் நலன் மற்றும் சங்கத்தின் வளர்ச்சி தொடர்பான கருத்துகளையும் அவர் நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து, எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்வதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் உறுதியளித்துள்ளார்.
சந்திப்பின் முடிவில், நடிகர் சிவகார்த்திகேயனை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்த எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள், இந்த சந்திப்பையும் அவரது சங்க இணைப்பையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.
நடிகராக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், பாடலாசிரியராகவும் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்திருப்பது திரையுலகில் கவனம் பெற்றுள்ள முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.











