தமிழ் சினிமாவில் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் அவர்கள் மறைவு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ இரங்கல் !
தமிழ் சினிமாவில் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் அவர்கள் மறைவு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ இரங்கல் !
சென்னை 04 டிசம்பர் 2025 இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்று திரு மெய்யப்ப செட்டியார் அவர்களால் தொடங்கப்பட்ட ஏவிஎம் நிறுவனம்.
தனது தந்தைக்குப் பிறகு, அந்த பெரும் நிறுவனத்தை இத்தனை ஆண்டுகளாக கட்டிக் காத்த பெருமைக்கு சொந்தக்காரர் ஏவிஎம் சரவணன்.
பாரம்பரியமிக்க ஏவிஎம் நிறுவனத்தின் அடையாளமாக இருந்து வந்த ஏ.வி.எம் சரவணன் அவர்கள் காலமானார் என்ற செய்தி திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் பேரதர்ச்சியாகும்.
தமிழ் திரை உலகில் வி.சி.குகநாதன், எஸ்.பி. முத்துராமன், ஏ.சி. திருலோகசந்தர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன், பாரதிராஜா, பாக்யராஜ் , இராம நாராயணன், விசு, கே. ரங்கராஜ், ஆர்.வி. உதயகுமார், ஷங்கர் என முன்னணி இயக்குனர்கள் பலரும் ஏ.வி.எம்.-ல் பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேலும் எம்.ஜி.ஆர். , சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த், அஜித், பாக்யராஜ், பாண்டியராஜன் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் மட்டுமல்ல சிறு முதலீட்டில் தயாரித்த சிறப்பான படங்கள் உட்பட 150 படங்களுக்கு மேல் தயாரித்த நிறுவனம் ஏ வி எம். எண்ணற்ற சின்னத்திரை தொடர்களையும் தயாரித்து, தொலைக்காட்சியிலும் தனி முத்திரை பதித்த நிறுவனம்.
சிறு முதலீட்டில் ஏ.வி எம் தயாரித்த “சம்சாரம் அது மின்சாரம் ” படம் தேசிய விருது பெற்ற படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரைப்படத் தொழிலை மிக நேர்த்தியாக கையாண்ட நிறுவனம் ஏவிஎம் நிறுவனம். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழி திரைப்படங்களிலும் கோலோச்சிய நிறுவனம்.
திரைப்படத்துறையில் சாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு வரும் ஒவ்வொருவருக்கும், ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு நுழைவதும் வாய்ப்புகள் பெறுவதும் பெரும் கனவாகவே இருந்து வந்தது.
அப்படி ஏவிஎம் ஸ்டுடியோவிற்குள் காலடி எடுத்து வைத்த பலர், திரைப்படத்துறையில் முன்னணி நடிகர்களாகவும் தொழில்நுட்ப கலைஞர்களாகவும் திகழ்கிறார்கள் என்றால் மிகையல்ல.
திரைப்படத் துறையினருக்கு ஒரு ஆலமரமாகவும் வேடந்தாங்களாகவும் விளங்கிய ஏவிஎம் நிறுவனத்தின் மூத்த வாரிசான ஏவிஎம் சரவணனின் இழப்பு திரைப்படத்துறைக்கு மட்டுமல்ல திரைப்பட ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் மிகையல்ல.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், ஏவிஎம் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் 71 ஆண்டு பாரம்பரியம் மிக்க சென்னை ,’சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ சார்பில் ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் அவர்களது துயரில் நாங்களும் பங்கு கொள்கிறோம். மீண்டும் ஒரு முறை ஆழ்ந்த இரங்கல்களை பதிவு செய்கிறோம்.
D.R.பாலேஷ்வர் , தலைவர்,
R.S.கார்த்திகேயன், செயலாளர்,A. மரிய சேவியர் ஜாஸ்பெல், பொருளாளர்.
‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ சென்னை – 24












