தமிழ்நாடு முதல்வர் இயக்குநர், நடிகர் ஆர்.வி. உதயகுமார் நெஞ்சார்ந்த நன்றி!

தமிழ்நாடு முதல்வர் இயக்குநர், நடிகர் ஆர்.வி. உதயகுமார் நெஞ்சார்ந்த நன்றி!

சென்னை 25 ஆகஸ்ட் 2026 இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு ரூ.2.50 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன.

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் கலைப்பணியையும், தமிழ் திரையுலகிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பையும் போற்றும் வகையில், அவருக்கு ரூ.2.50 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த மகத்தான அறிவிப்புக்காக தமிழக முதல்வர் மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கும், செய்தித்துறை அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார் இயக்குநர், நடிகர் ஆர்.வி. உதயகுமார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள நன்றியறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான பாதையை உருவாக்கி, கிராமிய வாழ்வியலையும், மண்ணின் மணத்தையும், மனிதர்களின் உணர்வுகளையும் திரையில் உயிரோட்டமாகப் பதிவு செய்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

அவரது படைப்புகள் தமிழ் திரையுலகில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியவை.

எண்ணற்ற கலைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், பல திறமையாளர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய முன்னோடியாகவும் அவர் திகழ்ந்தார்.

இப்படிப்பட்ட ஒரு மாபெரும் படைப்பாளியின் கலைப்பங்களிப்பை போற்றும் வகையில், அவருக்கு ரூ.2.50 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கும், செய்தித்துறை அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் எனது தனிப்பட்ட முறையிலும், இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையிலும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு படைப்பாளியின் கலைப்பணியை அரசு அங்கீகரித்து, அவரது நினைவை எதிர்கால தலைமுறைகளும் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைப்பது என்பது சாதாரண கவுரவம் அல்ல.

ஒரு படைப்பாளிக்கு அரசு வழங்கும் மிகப்பெரிய கவுரவம்’ என்றே இதனை நான் கருதுகிறேன்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் தமிழ் சினிமாவுக்கு செய்த பங்களிப்புகளையும், அவர் உருவாக்கிய கலை மரபையும், அவரது படைப்புகள் ஏற்படுத்திய தாக்கத்தையும் எதிர்கால தலைமுறைகள் தொடர்ந்து அறிந்து கொள்ள இந்த மணிமண்டபம் ஒரு முக்கியமான நினைவுச் சின்னமாக அமையும்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் நினைவைப் போற்றும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசுக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆர்.வி. உதயகுமார், இயக்குநர், நடிகர்
பொதுச்செயலாளர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்.

error: Content is protected !!