இறுதி பக்கம் திரை விமர்சனம் ரேட்டிங் –3 /5

 

நடிகர் நடிகைகள் – ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதா ஸ்ரீநிவாசன், விக்னேஷ் சண்முகம், கிரிஜா ஹரி, ஸ்ரீ ராஜ், சுபதி ராஜ், மற்றும் பலர்.

தயாரிப்பு – ட்ரீம் கிரியேஷன்ஸ்.

இயக்கம் –  மனோ வெ கண்ணதாசன்.

ஒளிப்பதிவு – பிரவின் பாலு.

படத்தொகுப்பு – ராம் பாண்டியன்.

இசை – ஜோன்ஸ் ரூபர்ட்.

திரைப்படம் வெளியான தேதி – 17 டிசம்பர் 2021

ரேட்டிங் –3 /5

திரைப்படம் என்பது மேஜிக் இல்ல லாஜிக் என்பதுதான் உண்மை.

சில சமயங்களில் நல்ல படம் என்று எதிர்பார்ப்போடு சென்றால் ஏமாற்றிவிடும்.

எதிர்பாராமல் சென்றால் சில திரைப்படங்கள் ரசிக்க வைத்துவிடும்.

இந்த இறுதி பக்கம் திரைப்படம் இதில் இரண்டாவது ரகம்.

இயக்குனர் மனோ கண்ணதாசன் ஒன்றைரை மணி நேரத்தில் ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லரைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

திரைப்படத்தில் அதிக பரிச்சயமில்லாத நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.

ஆனால், அனைவருமே யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் இயக்குனர் மனோ கண்ணதாசன் மட்டுமே சாரும்.

கதாநாயகி அம்ருதா ஸ்ரீநிவாசன் வீட்டில் தனியாக இருக்கும் போது மர்ம நபர் ஒருவரால் கொலை செய்யப்படுகிறார்.

அந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலசந்திரனிடம் ஒப்படைக்கப்படுகிறது.

பல கட்ட விசாரணையில் கொலை செய்த நபரை கைது செய்கிறார்.

அதன்பின் கொலை செய்ய சொன்னது வேறொரு மர்ம நபர் என்று தெரிந்தவுடன் அவரை தேடி அலைகிறார்.

அவர் வழக்கை விசாரிக்கும் போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடக்கிறது.

இறுதியில் அம்ருதாவை கொலை செய்தவரை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்டுபிடித்தாரா? இல்லையா ? எதற்காக கொலை செய்தார்கள்?
அதையெல்லாம் மீறி அவர் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இன்ஸ்பெக்டர் ஆக நடித்திருக்கும் ராஜேஷ் பாலசந்திரன் தான் நிரைப்படத்தின் கதாநாயகன்.

சினிமாத்தனமில்லாத இயல்பான முகம்.

வழக்கை விசாரிப்பதிலும் அவ்வளவு இயல்பு.

வழக்கமான சினிமாவில் விசாரிப்பது போல அவரது விசாரணை இல்லை.

இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலசந்திரனின் நடிப்பு திரைப்படத்திற்கு பலம்.

திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் அம்ருதா ஸ்ரீநிவாசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இயல் என்ற கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்திருக்கிறார்.

காமமா… காதலா… என்று பரிதவிக்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே கொல்லப்படுகிறார்.

அதன் பின் பிளாஷ்பேக்கில்தான் அவரது காட்சிகள் வருகிறது.

இப்படியெல்லாம் யோசிக்கும் பெண்கள் இருக்கிறார்களா என்று அவரது கதாபாத்திரம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

காதலனாக வரும் விக்னேஷ் சண்முகம், காதலிக்கும் போதும், காதலை வெறுக்கும் போதும், நடிப்பில் வித்தியாசம் காண்பித்து கவர்ந்திருக்கிறார்.

மற்றொரு நாயகனாக வரும் மிதுன் கொடுத்த வேலையை சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டருக்கு உதவும் பெண் போலீசாக கிரிஜா ஹரி, கான்ஸ்டபிளாக சுபதி ராஜ் ஆகியோரும் குறிப்பிட வேண்டியவர்கள்.

கொலை, கொலையின் பின்னணி, காதல், காமம், புத்தகம் என வித்தியாசமான திரைக்கதை மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இயக்குனர் மனோ வெ.கண்ணாதாசன்.

ஆரம்பத்திலேயே கதைக்குள் அழைத்து செல்லும் திரைக்கதை, இறுதி வரை விடாமல் பார்ப்பவர்களை கட்டி வைத்திருப்பது சிறப்பு.

காட்சியமைப்பில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார் இயக்குனர் மனோ செ.கண்ணதாசன்.

காதலையும், காமத்தையும் அதிகம் மிகைப்படுத்தாமல் சொல்லியிருப்பது அருமை. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

பிரவீண் பாலுவின் ஒளிப்பதிவு, ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசை, ராம் பாண்டியனின் படத்தொகுப்பு ஆகியவை கதையோடு பொருத்தமாக அமைந்து இயக்குனருக்கு கை கொடுத்திருக்கிறது.

ஒன்றரை மணி நேரத்தில் படம் முடிவடைந்துவிடுவதால், பாடல்கள், தேவையற்ற நகைச்சுவைக் காட்சிகள் என எதுவும் படத்தில் இல்லை.

நட்சத்திர அந்தஸ்து இல்லாமல் தங்களது படைப்புகளை, கதாபாத்திரங்களை நம்பி வரும் இது போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் வரவேற்கப்பட வேண்டியவை. இயக்குனர் மனோ அடுத்த படத்தில் முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பைப் பெறட்டும் என வாழ்த்துவோம்.

மொத்தத்தில் இறுதி பக்கம் – திரைப்படம் சுவாரசியம் அதிகம்.

error: Content is protected !!