தமிழக முதல்வர் பதவியை தவிர்க்கும் ரஜினிகாந்துக்கு தமிழருவி மணியனின் தரமான அட்வைஸ்.

கடந்த சில நாட்களாகவே ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த தமிழக அரசியலையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம் என்னவென்றால்.. “ரஜினிகாந்த் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரஜினிகாந்த் தமிழக முதல்வர் பதவியில் அமரமாட்டார்” என்ற ரஜினிகாந்தின் சொல்தான்.

இது விவாதப் பொருளாக பார்க்கப்பட்ட நிலையில் விழுப்புரத்தில் காந்திய மக்கள் இயக்கம் மற்றும் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் கூட்டம் நடைபெற்றது..

இதில் ‘ரஜினிகாந்தின் எதிர்பார்ப்பு என்ன ? ஏமாற்றம் என்ன?’ என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேச்சின் சில துளிகள் இங்கே…

ஒரு வார்டு கவுன்சிலர் ஆவதற்காக தன் கொள்கைகளை குழிதோண்டி புதைத்த மனிதர்களைதானே நாம் பார்த்துள்ளோம்.

ஆனால் ரஜினிகாந்த் பற்றற்ற ஒரு துறவியாகவே பாவிக்க கூடிய மனிதர் ஆவார்.

ராஜகண்ணப்பன் என்பவர் ஒருவர் இருக்கிறார்… 10 நாளைக்கு முன்பு அதிமுகவில் இருப்பார். அதற்கு முன்பு திமுக.வில் இருந்தார்.

அதற்கு முன் அதிமுக.வில் இருந்தார். மக்கள் நலனை விட அவருக்கு தன் நலனே முக்கியம்.

கொஞ்சமாவது இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு கோவம் வர வேணாமா? வராது போல.

வாடகை சைக்கிள் கடை வைத்திருப்பவர்கள் கூட நம்மை தெரியாது என்றால் வாடகைக்கு சைக்கிள் தர மறுப்பான்.

அரசியல் மாற்றம் என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் இல்லை.

ஒட்டுமொத்தமாக படிந்திருக்கும் இழிந்த அரசியல் கலாச்சாரத்தை தூக்கி போடுவதுதான் ரஜினிகாந்தின் அரசியல் மாற்றம்..

அவர் அரசியலை தூய்மைப்படுத்தவே வருகிறார்….

ரஜினிகாந்த் என்னிடம் ஒருமுறை கேட்டார், “ஐயா, மாற்று அரசியல் என்று திரும்ப திரும்ப என்று நீங்கள்தான் பேசுகிறீர்கள்? நான் அந்த முதல்படியிலாவது நான் கால் வைக்க வேணாமா?” என்றார்.

“அது என்ன முதல்படி?” என்றேன்… அதற்கு அவர், “ஆட்சி வேறு, கட்சி வேறு. ஆட்சி ஒருத்தர் நடத்தட்டும், கட்சி ஒருத்தர் நடத்தட்டும்.

கட்சி நடத்துபவர்கள் ஆட்சியில் அமர்ந்தால், அது கட்சியின் ஆட்சியாக இருக்குமே தவிர, மக்களின் ஆட்சியாக இருக்காது” என்று ரஜினி சொன்னார்.

இதைவிட மக்களாட்சி தத்துவத்துக்கு வேறு யாரால் விளக்கம் சொல்ல முடியும்?

உடனே நான் கேட்டேன்.. “சரி.. கட்சியை ஒருவரிடம் தந்துவிடுங்கள், ஆட்சியை நீங்கள் வைத்து கொள்ளுங்கள்” என்றேன்.

இப்படி பேசும் ஒரு அரசியல்வாதியை காட்டுங்கள் பார்க்கலாம்.

ரஜினிகாந்தின் “ஏமாற்றம்” என்னவென்றால் ரஜினிகாந்த் மன்றத்தினர் தமிழக மக்களை சென்று சந்திக்கவில்லை என்பது மட்டும்தான்.

மகாத்மா காந்தி நினைத்திருந்தால் அவர் இந்தியாவின் முதல் பிரதமராக வந்திருப்பார். யாரும் கேள்வி எழுப்பியிருக்க முடியாது..

ஆனால் ஜவஹர்லால் நேருவை பிரதமராக்கினார்… பின்னர் நேரு, காந்தியின் பேச்சை கேட்கவில்லை..

அதிகாரம் வலிமையானது என்பதை உணருங்கள் என்று ரஜினிகாந்திடம் சொன்னேன்..

முதல்வராக எடப்பாடியை பழனிசாமியை சசிகலாதான் தேர்வு செய்தார். 30 நாள்கூட தேற மாட்டார் என்று நினைத்த எடப்பாடியையே 3 வருஷம் ஆகியும் அசைக்க முடியவில்லை..

அமாவாசை என்றாலே எடப்பாடி என்றாகிவிட்டது.. அவரை்குறைத்து சொல்லவில்லை.. அவர் மீது மரியாதை இருக்கிறது.

கூவத்தூரில் எடப்பாடிதான் முதல்வர் என்று சொன்னதுமே அப்படியே முட்டி போட்டபடியே சசிகலாவிடம் வந்தார். இப்படி ஒரு அமாவாசை கிடைப்பார் என்று நாம்கூட நினைக்கவில்லை..

சசிகலா சிறைக்கு போனவுடன் முட்டி போட்டவர் எழுந்து நின்றார்.. அதான் அவரை அப்படி சொன்னேன்.

அண்மையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினிகாந்த் 3 விஷயங்களை பேசினார்.

அதில், ஆட்சிக்கு வந்தால் கட்சிப்பதவி பறிக்கப்படும். 48 வயதுக்குட்பட்டோருக்கு 60 சதவீதம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்றார். இதற்கு ஒப்புக்கொண்ட மாவட்ட செயலாளர்கள் அடுத்து அவர் சொல்லிய விஷயத்திற்கு மட்டும் ஒப்புக்கொள்ளவில்லை. அது என்னவென்றால், நான் அதிகாரத்திற்கு வரமாட்டேன் என்றதுதான்..

அதிகாரம்.. பதவி… இதை ரஜினிகாந்த் புரிந்து கொள்ள வேண்டும்.. ரஜினிகாந்த் எந்த அமாவாசை பின்னால் செல்ல பார்க்கிறார்.

ஒருநாளும் இந்த தவறை ரஜினிகாந்த் செய்ய மாட்டார்.. ரஜினிகாந்த் அவர்களே.. நான் உட்பட எவனையும் நீங்கள் முதல்வர் என்று சொல்லாதீர்கள்.

கட்சித் தலைமையாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஆட்சித் தலைமையாக ரஜினிகாந்த் மட்டுமே இருக்க வேண்டும். இந்த கோரிக்கையை உங்களிடம் வைக்கிறேன்.

ரஜினிகாந்த் அனைத்துத் தலைவர்களையும் அரவணைக்கிறார். ஆனால் அவருக்கு ஆதரவாக எந்த அரசியல்வாதியும் பேசியதில்லை.

எம்ஜிஆரின் சுறுசுறுப்பு.. இந்திரா காந்தியின் கண்ட அதே விறுவிறுப்பு ரஜினிகாந்திடம் எனக்கு தெரிகிறது.” என்றார்.

இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.