ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மருமகனும் நடிகை மேக்னாராஜின் கணவருமான நடிகர் சிரஞ்சீவி சர்ஜா காலமானார்.

தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா படங்களில் நடித்தவர் நடிகை மேக்னா ராஜ்.

தப்புத்தாளங்கள் திரைப்படத்தில் நடித்த பிரமிளா ஜோசாய் – சுந்தர்ராஜன் ஆகியோரின் மகள்தான் மேக்னாராஜ். இவருக்கு நயன்தாரா சாயல் இருப்பதாக பலரும் கூறுவர்.

மேலும் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார் மேக்னா ராஜ்..

இவர் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிரஞ்சீவி சர்ஜா (வயது 39) கன்னட திரையுலகின் இளம் ஆக்ஷன் ஹீரோ. நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மருமகனும் ஆவார்.

2009-ல் ‘வாயுபுத்திரா’ திரைப்படம் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா.

கடைசி திரைப்படம் ‘ஷிவார்ஜுனா’ ஆகும். 21 திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா தற்போது ரணம் உட்பட 4 படங்களில் கதாநாயகனாக நடித்து கொண்டிருந்தார்.

இவருடைய தம்பி துருவா சர்ஜாவும் கதாநாயகனாக வலம் வருகிறார்.

இந்த நிலையில் இன்று பிற்பகலில் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக பெங்களூர் ஜெய்நகரில் உள்ள சாகர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளித்தும் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

மாலை 6 மணி அளவில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இவரின் திடீர் மறைவு கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிரஞ்சீவி சர்ஜாவின் தொண்டை சளி கரோனா தொற்று பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!