நடிகை அம்பிகா மீது நடிகை ராதா பரபரப்பு புகார்..! ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு !
நடிகை அம்பிகா மீது நடிகை ராதா பரபரப்பு புகார்..! ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு !
சென்னை 21 செப்டம்பர் 2026 நடிகை அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது, அவரது சகோதரி நடிகை ராதா சுமார் ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ராதா தனது புகாரில், தனது வணிகத் தேவைகளுக்காக வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த கையெழுத்திட்ட சில காசோலைகள் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது புகாரின்படி, பழைய வங்கிக் கணக்குடன் தொடர்புடைய ஐந்து காசோலைகள் நடிகை அம்பிகா பெயரில் பணமாக்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்டதாக செப்டம்பர் 17ஆம் தேதி வங்கியிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
அந்த காசோலைகள் மூலம் சுமார் ரூ.46 கோடி பெற முயற்சி செய்யப்பட்டதாக நடிகை ராதா தெரிவித்துள்ளார்.
தான் நடிகை அம்பிகாவிடம் அந்தக் காசோலைகளை வழங்கவில்லை என்றும், அந்த அளவிலான பணப் பரிவர்த்தனை தொடர்பாக எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என்றும் நடிகை ராதா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், அந்தக் காசோலைகளை தனது சகோதரர் நிரப்பியதாகவும், நடிகை அம்பிகாவும் அவரும் இணைந்து அவற்றைப் பயன்படுத்தியதாகவும் நடிகை ராதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதனுடன் குடும்பச் சொத்து தொடர்பான பிரச்சினையும் இருப்பதாக நடிகை ராதாவின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ராதா தனது புகாரில் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.











