ஊடகவியலாளர் அனைவருக்கும் கொரோனா உதவித் தொகை வழங்கிட தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேண்டுகோள்.
சென்னை 04 ஜூன் 2021
ஊடகவியலாளர் அனைவருக்கும்
கொரோனா உதவித் தொகை வழங்கிட தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேண்டுகோள்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு
ரூ. 5,000 உதவித்தொகையும், யாரேனும் இறந்துவிட்டால் அவர்களது குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காலத்தில் மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கும் நிலையில் தங்களின் உயிரையை பணையம் வைத்து கொரோனா பரவல் சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அரசின் தடுப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்துவது என 24 மணி நேரமும் இரவு – பகலாக ஊடகவியலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் முன்களப் பணியாளர்கள் பெற்று வரும் உரிமைகள் ஊடகத் துறையினருக்கும் வழங்கப்படும் என மாண்புமிகு. முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளது ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அரசின் அங்கீகார அட்டைகள் வைத்திருக்கும் ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே முதலமைச்சரின் அறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப் பட்டுள்ளதால் அடையாள அட்டை இல்லாத ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரிதும் கவலை ஏற்பட்டுள்ளது.
மேலும் காட்சி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர், செய்தி பிரிவு பணியாளர்கள், உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் குழு உறுப்பினர்கள், அச்சு ஊடகங்களில் அச்சிடப்பட்ட பத்திரிக்கை கட்டுனர்கள் தொடங்கி மாவட்ட தலைநகர் நிருபர்கள், வட்டத் தலைநகர், ஒன்றியங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள நிருபர்கள், நிழற்பட நிருபர்கள், வாசகர்களுக்கு பத்திரிகை விநியோகிப்பவர்கள் என அனைவரையும் ஊடகப் பணியாளர்களாகவே கருத வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
எனவே, மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தற்போதைய விதியை தளர்த்தி, அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா நிவாரண சலுகைகள், உரிமைகள் கிடைத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது உயிரிழந்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்காத நிலை உள்ளது.
எனவே, தமிழக முதலமைச்சர் அவர்கள் இதையும் கருத்தில் கொண்டு உயிரிழந்த ஊடகவியலாளர்கள் அனைவரின் குடும்பத்திற்கும் உடனடியாக நிவாரணம் வழங்கிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
(கே. பாலகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர்.












