புதிய திரைப்படங்கள் வெளியீட வி பி எஃப் கட்டணம் செலுத்த மாட்டோம் தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை.
சென்னை 04 ஜூலை 2021
புதிய திரைப்படங்கள் வெளியீட வி பி எஃப் கட்டணம் செலுத்த மாட்டோம் தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை.
கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த பல மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடிக் கிடக்கின்றன.
தற்போது வருகிற ஜூலை 15-ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திரையரங்குகளில் புதிய திரைப்படங்களை திரையிட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் அந்த தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தர வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை திரையரங்குகள் திறப்புக்கு முன் நடைமுறைப்படுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், திரையரங்குகள் உரிமையாளர்களுக்கு கெடு விதித்துள்ளனர்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாக் குழு கூட்டம் அந்தச் சங்கத்தின் தலைவரான முரளி ராமசாமியின் தலைமையில் நடை பெற்றது.
நடந்த கூட்டத்தில் சில மு்க்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
திரையரங்குகள் அனைத்திலும் டிக்கெட் வழங்கும் முறை கணினி மயமாக்க வேண்டும்.
அதன் வெளிப்படைத் தன்மையை தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
திரையரங்குகளில் திரையிடப்படும் திரைப்படங்களின் உரிமை முழுவதும் தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்.
திரையரங்குகள் உரிமையாளர்களுக்கு அதில் எந்த உரிமையும் இல்லை.
இதனால் தயாரிப்பாளர்களின் அனுமதி பெற்ற பின்னரே ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும்.
ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் வரும் வருமானம் திரையரங்கு உரிமையாளர்கள், புக்கிங் ஏஜென்ட் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பிரித்து தர வேண்டும்.
திரையரங்குகளில் திரைப்படங்களுக்கு இடையே வெளியாகும் விளம்பரங்களிலும் அந்தப் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு பங்கு வேண்டும்.
ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் உள்ள குளறுபடிகளை தீர்க்க, திரையரங்குகளின் பெயரிலேயே இனிமேல் வரி கட்ட வேண்டும்.
தனி நபர்களின் பெயர்களில் வரியைக் கட்டக் கூடாது.
தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனையைத் தீர்க்க, சிண்டிகேட் அமைத்து செயல்படும் முறையை திரையரங்கு உரிமையாளர்கள் கலைக்க வேண்டும்.
சின்ன பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது, மூன்று வகையாக டிக்கெட்டுகளை விற்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் திரைப்படங்களை வெளியிடும் போது வி.பி.எப்., கட்டணத்தை தயாரிப்பாளர்கள் செலுத்த மாட்டோம்.
இது குறித்த முடிவுகளை திரையரங்கு திறப்புக்கு முன்பே நடைமுறைப்படுத்த வேண்டும்.
இல்லையென்றால், அரசிடம் முறையிட்டு இதற்குத் தீர்வு காண வழி செய்யப்படும்.
இந்தத் தீர்மானங்கள் அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.











