சிறப்பு முகாம்கள் எனும் வதைக் கூடங்களை உடனே மூடுங்கள்* – சீமான் சீற்றம்.

சென்னை 22 ஆகஸ்ட் 2021 சிறப்பு முகாம்கள் எனும் வதைக் கூடங்களை உடனே மூடுங்கள்*
– சீமான் சீற்றம்.

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி பட்டினிப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த தம்பிகளில் நிரூபன், முகுந்தன் ஆகிய இருவரும் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்துயரச் செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப் போனேன்.

தமிழர்களின் தாய்நிலமான தமிழகத்திலேயே தொப்புள் கொடி உறவான ஈழச்சொந்தங்களுக்கு நேர்கிற இத்தகைய இழிநிலையும், கொடுந்துயரமும் பெரும் மனவேதனையைத் தருகிறது.

ஈழத்தமிழர் எனும் ஒற்றைக் காரணத்துக்காகவே அவர்களைச் சந்தேக வளையத்திற்குள் வைத்துக் கண்காணித்து, அவர்கள் மீது மனித உரிமை மீறலை அரங்கேற்றி வரும் ஆளும் அரசதிகாரத்தின் தொடர் செயல்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை.

திருச்சி மத்திய சிறை வளாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்கள் 78 பேரும் தங்களை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும், பல்வேறு வடிவங்களில் அறப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தங்களது பக்கமிருக்கும் நியாயத்தை நிலைநாட்டவும், அரசின் செவியைத் திறக்கவுமென, கடந்த 10 நாட்களாகப் பட்டினிப்போராட்டம் செய்து வரும் அவர்களை அரசு கண்டுகொள்ள மறுத்துவிட்டது.

வேறு வழியற்ற நிலையில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டும், கத்தியால் உடலில் அறுத்துக்கொண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளது பெரும் மனவலியைத் தருகிறது.

தமிழ்நாட்டிலேயே ஈழச்சொந்தங்களுக்கு நிகழ்ந்தேறும் இக்கொடுமைகளும், அதற்கு எதுவும் செய்யவியலாத சூழலில் நிறுத்தியிருக்கும் அதிகாரமற்ற கையறு நிலையும் குற்றவுணர்ச்சிக்குள் தள்ளி, ஆற்றாமையையும், பெருஞ்சினத்தையும் வரவழைக்கிறது.

சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்திய கோர இனப்படுகொலைக்கு ஆட்பட்டு, மறுவாழ்வுக்காக தாய்த் தமிழகத்தை நம்பி அடைக்கலம் புகுந்த ஈழச்சொந்தங்களுக்கு அதிகப்படியான முன்னுரிமை தந்து, கூடுதலான வசதிகளையும், வாய்ப்புகளையும் செய்து தந்திருந்தால் தமிழகத்தின் முகாம்களை, ‘சிறப்பு முகாம்கள்’ எனக் குறிக்கலாம்.

அதற்கு மாறாக, அவர்களை விலங்குகள் போல அடைத்து வைத்து,

வாழவே விடாது நாளும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் கொடுமையான முகாம்களை, ‘சிறப்பு முகாம்கள்’ எனக் கூறுவது கேலிக்கூத்தானது.

சிறப்பு முகாம் எனும் பெயரில் இயங்கும் வதைக்கூடங்கள் ஈழச் சொந்தங்களின் அடிப்படை சனநாயக உரிமைகளையே முற்றாக மறுத்து,

அவர்களைத் துயருக்குள் ஆழ்த்தி பெருங்கொடுமைகளை அரங்கேற்றி வருவதாலேயே அவற்றை மூடக்கோரி, பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம்.

ஈழத்தில் போர் முடிவுற்றப் பிறகு, சிங்களப் பேரினவாத அரசால் வன்னியிலுள்ள முள்வேலி முகாம்களில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்ட இழிநிலையே, தமிழகத்திலும் சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் தொடருமென்றால், இது தமிழர் நாடா? இல்லை! சிங்களர் நாடா? என எழும் கேள்விக்கு என்ன பதிலுண்டு?

இன்று நேற்றல்லாது பல ஆண்டுகளாக, சிறப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களை மூடக்கோரிப் பலகட்டமாகப் போராடியும், கருத்துப்பரப்புரை செய்தும், தேர்தல் மேடைகளில் கோரிக்கையாக வைத்தும் அதனை ஆளுகிற அரசுகள் செய்ய மறுத்து வருவது தமிழர்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணிச் செயல்படும் திராவிடக்கட்சிகளின் தமிழர் விரோத மனப்பான்மையையே உணர்த்துகிறது.

தமிழகத்திற்குள் வாழ தஞ்சம் கேட்டு வரும் ஈழச்சொந்தங்களுக்கு குடியுரிமையைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு,

இன்றைக்கு மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்டிருக்கும் சிறப்பு முகாம்களின் கொடியப்பிடியிலிருந்து அவர்களை விடுவிக்க மறுத்து இரட்டைவேடமிடுவது வெட்கக்கேடானது.

ஆகவே, இனிமேலாவது இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து,

சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் இயங்கும் அனைத்து வதைக்கூடங்களையும் உடனடியாக மூடி, ஈழச்சொந்தங்களுக்கான நலவாழ்வையும், வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தித் தர நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.,

பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் உடல் நலிவுற்றிருக்கும் ஈழச்சொந்தங்களின் உயிரைக்காத்து, உடல்நலம் தேற்ற தகுந்த மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி