சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த வந்த பாதை.?

சென்னை : 12 டிசம்பர் 2020

இன்று பிறந்தநாள் காணும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

தென்னிந்தியாவின் “சூப்பர்ஸ்டார்” ரஜினிகாந்த் அவரகள் பிறந்தநாள் இன்று.,

இந்திய திரைப்படத உலகில் தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்தியா மட்டுமல்லாமல் ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும், தனக்கென ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தனது வாழ்க்கையை ஒரு பஸ் கண்டக்டராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, திரைப்படத்துறையில் மாபெரும் கதாநாயகனாக சாதனைப் படைத்தவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் டிசம்பர் 12, 1950 ஆம் ஆண்டு பிறந்த ரஜினிகாந்த் அவருடைய இயற்பெயர்‘சிவாஜி ராவ் கெய்க்வாட்’ கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் ராமோஜி ராவ் கெய்க்வாட்டுக்கும், ரமாபாயிக்கும் நான்காவது மகனாக பிறந்தார்.

இவருடன் இரண்டு சகோதரர்களும் மற்றும் ஒரு சகோதரியும் உடன் பிறந்தவர்கள்.

தன்னுடைய ஐந்தாவது வயதில் தாயை இழந்த ரஜினிகாந்த் அவர்கள் பெங்களூரில் உள்ள “ஆச்சாரியா பாடசாலை” மற்றும் “விவேகானந்த பாலக சங்கத்தில்” பள்ளிப்படிப்பை முடித்தார்.

பள்ளிப்படிப்பை முடித்த பிறகு பேருந்தில் ஒரு நடத்துனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய அவர் பல மேடை நாடகங்களில் நடிப்பதை பொழுது போக்காக கொண்டிருந்தார்.

நடிப்பின் மீது ஏற்பட்ட காதலால் நடிகராகும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார்.

ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் ஒரு நண்பனின் உதவியால் “சென்னை திரைப்படக் கல்லூரியில்” சேர்ந்தார்.

படிப்பை முடித்த பின்னர் 1975 ஆம் ஆண்டு, கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

திரையுலக வாழ்க்கையை அங்கே தொடங்கிய அவர், 1976ல் “கதா சங்கமா” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு அதே ஆண்டில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “மூன்று முடிச்சு” திரைப்படம் அவரை ஒரு சிறந்த நடிகனாக அடையாளம் காட்டியது.

இந்த திரைப்படத்தில் ஒரு பெண்ணாசை பிடித்த நடிகராக சிறப்பாக தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

அவர் தனக்கேன சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு வாய்க்கு கொண்டுவரும் ஸ்டைலினை இந்த படத்தில் அற்புதமாக செய்திருப்பார்.

அதனை தொடர்ந்து ‘அவர்கள்’ ‘16 வயதினிலே’ ‘காயத்ரி’ போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார்.

ஆரம்ப காலங்களில் நடிகர் கமல்ஹாசன் உடன் இணைந்து வில்லனாக பல படங்களில் நடித்துள்ளார்.

அபூர்வ ராகங்களை தொடர்ந்து இருவரும் இணைந்து மூன்று முடிச்சு, அவர்கள்்,ஆடுபுலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, பதினாறு  வயதினிலே, நினைத்தாலே  இனிக்கும், அலாதீனும் அற்புதவிளக்கும்,அவள் அப்படி தான்,போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நடிகர் திலகம் சிவாஜிஅவர்களுடன் இணைந்து நான் வாழ வைப்பேன், ஜஸ்டிஸ் கோபிநாத், படிக்காதவன், விடுதலை, படையப்பா, போன்ற படங்களில் நடித்துள்ளார்.

1977 ஆம் ஆண்டு நடித்த ‘புவனா ஒரு கேள்விக்குறி’ திரைப்படம் ரஜினிகாந்த் அவர்களுக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படமாக இருந்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியை அவர் பெற்றார்.

‘பில்லா’, ‘போக்கிரிராஜா’, ‘தனிக்காட்டு ராஜா’, ‘முரட்டுக்காளை’, போன்ற திரைப்படங்களில் ஒரு அதிரடி கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றார்.

1981 ஆம் ஆண்டு, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “தில்லு முல்லு” திரைப்படத்தின் மூலம், தன்னை ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக வெளிப்படுத்தியிருப்பார்.

பொல்லாதவன், சிவப்பு சூரியன், ‘வேலைக்காரன்’, ‘பணக்காரன்’, ‘மிஸ்டர் பாரத்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘எங்கேயோ கேட்டக் குரல்’, ‘மூன்று முகம்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’ மற்றும் ‘நான் சிவப்பு மனிதன்’ போன்ற திரைப்படங்கள் இவருக்கு மேலும் பல வெற்றிகளை பெற்றுத்தந்தது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில், 1985 ஆம் ஆண்டு எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த அவருடைய 100 வது படமான “ஸ்ரீராகவேந்திரா” திரைப்படம் அவருக்கு வித்தியாசமான நடிப்பு அனுபவத்தைப் பெற்றுத்தந்தது எனலாம்.

இந்த திரைப்படத்தில், இந்து சமயப் புனிதரான “ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்” வாழ்க்கையை, ஒரு நடிகராக வாழ்ந்து காட்டியிருப்பார்.

இதனைத் தொடர்ந்து, ‘படிக்காதவன்’, ‘மாவீரன்’, ‘ஊர்காவலன்’, ‘மனிதன்’, ‘குரு சிஷ்யன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘ராஜாதி ராஜா’, ‘ராஜா சின்ன ரோஜா’, மற்றும் ‘மாப்பிள்ளை’ போன்ற திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்களாக இருந்தது.

1990 ஆம் ஆண்டுகளில் நடித்த ‘பணக்காரன்’, ‘தர்மதுரை’, சிவா ‘தளபதி’, ‘மன்னன்’, ‘அண்ணாமலை’, ‘பாண்டியன்’, ‘‘உழைப்பாளி’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல், இவருக்கு இந்தியாவில் ‘சூப்பர்ஸ்டார்’ என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத்தந்தது எனலாம்.

1995 ஆம் ஆண்டு வெளிவந்த “முத்து” திரைப்படம், இந்தியாவை தாண்டி வெளிநாட்டிலும் முத்திரை பதித்தது. குறிப்பாக ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, வெளியிடப்பட்ட இத்திரைப்படம் ஜப்பானிலும் பெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் அம்மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற தகுதியையும் பெற்றது.

மாபெரும் எதிர்பார்ப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 2002 ஆம் ஆண்டு வெளிவந்த “பாபா” திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியைத் தரவில்லை என்றாலும்,
2005 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த “சந்திரமுகி” திரைப்படம் மற்றும் 2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த “சிவாஜி” திரைப்படம் நல்ல வசூலை பெற்றுத்தந்தது.

மீண்டும் ஷங்கருடன் இணைந்து, அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட “எந்திரன்’ திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, பல சாதனைகளை படைத்தது. , தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படம்.

2014 ல் கோச்சடையான் இந்திய திரையுலகில் மோசன் கேப்சர் முறையில் முதன் முறையாக தயாரிக்க பட்டு வெளிவந்தது.

2016 கபாலி 2018 ல் காலா மற்றும் எந்திரன் 2.0 திரைப்படத்தை தொடர்ந்து 2019 ல் பேட்ட என்ற படம் 2020 ல் தர்பார் என்று தொடர்ந்து நடித்துக்கொண்டுள்ளார்.

தற்போது தயாரிப்பில் உள்ள அண்ணாத்தே திரைப்படம் உட்பட.!

ரஜினிகாந்த் அவர்கள், தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

‘பிளட் ஸ்டோன்’ (1988) என்ற ஆங்கில திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

“தில்லு முல்லு” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது, மனைவி லதாவை முதன் முதலாக சந்தித்தார்.

சென்னையிலுள்ள “எத்திராஜ் கல்லூரியில்” படித்துக் கொண்டிருந்தபொழுது, ரஜினியை பேட்டி எடுக்க சென்ற லதாவிடம் அந்த பேட்டியின்போதே “தன்னை மணக்க விருப்பமா?” என்று ரஜினிகாந்த் கேட்க, லதாவின் பெற்றோரிடம் சம்மதம் பெற்ற அவர்கள், 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.

இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இருமகள்கள் உள்ளனர்.

ஐஸ்வர்யா நடிகர் தனுஷை மணந்துள்ளார்.

“முள்ளும் மலரும்” திரைப்படம் உட்பட
ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருது வாங்கியுள்ளார்.

“ஆறிலிருந்து அறுபது வரை” திரைப்படத்திற்காக “தேவர் விருது” வழங்கப்பட்டது.

“நல்லவனுக்கு நல்லவன்” திரைப்படத்திற்காக “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.

1985 ஆம் ஆண்டு தமிழக அரசின் “கலைமாமணி விருது” வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு “எம்.ஜி.ஆர் விருது” 1995 ல் கலைச்செல்வம் விருது, 2000 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம பூஷன்” விருது, 2011 ல் என்டிடிவி யின் என்டெர்டெயினர் ஆஃப் தி டிகேட் விருது, 2013 ல் என்டிடிவியின் சிறந்த ஆளுமைக்கான விருது, 2014 ல் 45 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில்
இந்திய திரை ஆளுமை விருது, 2016 ல் பத்மவிபூஷன் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

தன்னம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியையும் கொண்டு கடுமையாக உழைத்தால், வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

error: Content is protected !!