‘பரிசு’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஜான்விகா, ஜெய் பாலா, கிரண் பிரதீப், சுதாகர், ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ட்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்னப் பொண்ணு, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கலா அல்லூரி.
ஒளிப்பதிவாளர் :- சங்கர் செல்வராஜ்.
படத்தொகுப்பாளர் :- .எஸ்.பிரேம்குமார் , ராம் கோபி.
இசையமைப்பாளர் :- ராஜீஷ், .வி. ஹமரா.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்ரீகலா கிரியேஷன்ஸ்..
தயாரிப்பாளர் :- கலா அல்லூரி.
ரேட்டிங் 2./5.
கதாநாயகி ஜான்விகாவின் தந்தை ஆடுகளம் நரேன் ஒரு ராணுவ வீரர் மகள் கதாநாயகி ஜான்விகா பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவி படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் அதிகமாக இருப்பதால் தன் தந்தையைப் போல் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என ஆசைப்படுகிறார்.
கதாநாயகி ஜான்விகாவின் அழகையும் அறிவையும் பார்த்துவிட்டு அதே கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் நெருங்கிப் பழகவும், அன்பளிப்பு கொடுக்கவும்,பூங்கொத்து பரிசளிக்கவும் என்று பின் தொடர்கிறார்கள்.
கதாநாயகி ஜான்விகா மீது ஆசையுடன் காதலைச் சொல்ல ஏங்குகிறார்கள்.
ஆனால் கதாநாயகி ஜான்விகா எந்தவிதமான மனச்சலனமும் இல்லாமல் இருக்கிறாள்.
அது ஒரு பருவக் கோளாறு என்று நினைத்து எந்த விதக் கோபமும் காட்டாமல் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இலகுவாக புறந்தள்ளிவிட்டுத் தனது இலட்சியத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறாள்.
விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் அவள், தந்தையிடம் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெறுகிறாள்.
ஒரு நவீனப் பெண்ணாகத் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றாலும் பாரம்பரியத்தை மறக்காமல் விவசாயத்தில் ஈடுபாடு கொண்டவளாக இருக்கிறாள்.
விவசாய வேலைகளில் ஈடுபடுவதும் டிராக்டர் ஓட்டுவதும் என்றும் அதையும் விடாமல் செய்கிறாள்.அவளைத் தோழிகள் லேடி நம்மாழ்வார் என்கிறார்கள்.
சமூக சேவையிலும் ஆர்வம் உண்டு.கல்லூரி மாணவர்களை இணைத்துக் கொண்டு கிராமங்களைச் சுத்தம் செய்கிறாள்.
முறையான பயிற்சிக்குப் பின் குறி பார்த்துச் சுடும் திறமையை வளர்த்துக் கொள்கிறாள்.
எகிப்தில், கெய்ரோவில் நடக்கும் ஆசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் முதல் பரிசும் பெறுகிறாள்.
இவ்வளவும் செய்யும் ஜான்வி, தனது தந்தையின் ஆசையின்படி ராணுவத்தில் சேர வேண்டும் என்று கனவு காண்கிறாள்.
தனது உறவினர் சென்ட்ராயன் வீட்டு நிகழ்ச்சிக்கு ஜான்வி சென்றபோது அங்கே நிகழ்ச்சியைப் புகைப்படம் எடுக்க வந்த புகைப்படக்காரர் ராஜேஷின் அறிமுகம் கிடைக்கிறது.
அவர்களுக்குள் ஒரு புரிதல் உண்டாகிறது. ராஜேஷ் அவளைக் காதலிப்பதாகக் கூறுகிறான் .
ஆனால் தனது லட்சியத்திற்குப் பிறகு தான் எல்லாமே என்று அவள் தள்ளி வைக்கிறாள்.
அப்படிப்பட்டவள் ஒரு கார் மீது லாரி மோதி விட்டு தப்பிச்செல்லும் விபத்தைக் கண்ணெதிரே பார்க்கிறாள்.
காருக்குள் இருந்தவரைக் காப்பாற்றியதுடன் குற்றவாளியைப் பிடிக்க போலீசுக்கு உதவுகிறாள்.
அதன் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் ஜான்வியைக் கடத்துகிறார்கள்.
அவள் அந்த எதிரிகளை எவ்வாறு எதிர்கொள்கிறாள்? அவள் தனது ராணுவக் கனவை நிறைவேற்றினாளா? என்பதுதான் இந்த’பரிசு’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த பரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக ஜான்விகா நடித்துள்ளார்.
கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான்விகா குடும்பப் பாங்கான தோற்றத்தில் துடிப்பான கல்லூரி மாணவியாகவும் ,பிறருக்கு உதவும் இரக்க குணம் கொண்ட பெண்ணாகவும், துப்பாக்கி சுடுதலில் துடிப்புள்ளவராகவும், தந்தையின் கனவை நிறைவேற்றப் பாடுபடும் ஒரு மகளாகவும் , விவசாயியாகவும், ராணுவ வீரராகவும் வருகிறார்.
.சண்டைக் காட்சிகளில் எதிரிகளைப் பந்தாடும்போது வேறொரு அவதாரமாகத் தோன்றுகிறார்.
இப்படி ஆறு பேருடன் மோதும் காட்சிகளில் அவர் எகிறிக் குதித்து தனது சாகசத்தைக் காட்டி வியக்க வைக்கிறார்.
விவசாயம் செய்பவராக டிராக்டர் ஓட்டிக்கொண்டு ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்று காட்டுகிறார்.
அது மட்டும் அல்ல ராணுவ வீரராக மிடுக்குடன் தோன்றுகிறார்.
இவர் ஆர்ப்பாட்டமான வசனங்கள் பேசாமல் மென்மையாகவே அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார்.
வன்மையான மனதுடன் மென்மையான முறையில் தான் சவால்களைச் சந்திக்கிறார்.
இவரது பாத்திரம் பெண்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
படிக்கிற வயதில் காதல் என்ற மாயவலைக்குள் சிக்காமல் தங்கள் இலட்சியத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் விதைக்கிறது.
கதாநாயகி ஜான்விகா வளைய வளைய ஜான் ஜான் என்று
கல்லூரியில் சுற்றி வரும் மாணவன் பாத்திரத்தில் கிரண்பிரதாப் நடித்துள்ளார்.
தனது உடல் மொழியாலும் நடவடிக்கைகளாலும் அவர் சிரிக்க வைக்கிறார்.
ராஜேஷ் பாத்திரத்தில் வரும் ஜெய் பாலா ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் கவர்கிறார்.
மனோபாலா, சின்னப்பொண்ணு ஜோடிக்கு மகனாக வரும் சென்ட்ராயன் இணைந்த கூட்டணி சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலும் பேசும் வசனங்கள் உருவக்கேலியாகவே உள்ளன. அந்த நகைச்சுவைக் கூட்டணியைச் சரிவரப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.
ஜான்விகாவின் தந்தையாக முன்னாள் ராணுவ வீரராக வரும் ஆடுகளம் நரேன்,
அன்பு மகளிடம் கனவுகளை வளர்த்தெடுக்கும் பாசமுள்ள தந்தையாக வருகிறார்.
தனது தோற்றத்தாலும் நடிப்பாலும் பாத்திரத்தை நிறைவு செய்துள்ளார்.
மருத்துவமனை நடத்திக் கொண்டு உறுப்பு திருட்டு செய்யும் தொழிலதிபர் பாத்திரத்தில் நடித்துள்ள சுதாகரும் தனது வில்லத்தனத்தில் கவனிக்க வைக்கிறார்.
இந்த பரிசு திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர் நடிகைகள் அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ராஜீஷ், .வி. ஹமரா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு திரைக்கதை ஓட்டத்திற்கு மிகவும் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
பெண்களுக்குத் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும்அளிக்கும்படி பல வசனங்கள் உள்ளன.ஒரு கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஜான்விகா பேசும் வசனம் ஒரு உதாரணம்.
‘1943 ஜூலை 9ஆம் தேதி நேதாஜி சிங்கப்பூரில் பேசும்போது பெண்கள் துப்பாக்கி ஏந்த வேண்டும் என்றார்.ஜான்சி ராணி லட்சுமி பாய் வாளேந்தி சண்டையிட்டது போல் பெண்கள் துப்பாக்கி ஏந்தினால் இந்தியாவிற்கு விரைவில் சுதந்திரம் கிடைத்துவிடும் ‘என்றதை நினைவூட்டிப் பேசும் வசனம் பெண்களுக்குச் சரியான ஊக்கமும் உந்துதலும் தரும்.
மொத்தத்தில் குடும்பத்துடன் குறிப்பாகப் பெண்கள் முகம் சுழிக்காமல் பார்க்கும் படமாகவும் அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலும் இருக்கிற வகையில் இந்தப் படத்தை வரவேற்கலாம்.











