கிடா திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.75/5.

நடிகர் & நடிகைகள் :- பூ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லட்சுமி, பாண்டி, ஜோதி, ராஜு, கருப்பு, ஆனந்த், ஜெய், தேவா, சங்கிலி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ரா.வெங்கட்.

ஒளிப்பதிவாளர் :- எம. ஜெயப்பிரகாஷ்.

படத்தொகுப்பாளர் :- ஆனந்த் ஜெரால்டின்.

இசையமைப்பாளர் :- தீசன்.

தயாரிப்பு நிறுவனம்:- ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ்.

தயாரிப்பாளர்கள் :- ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா.

ரேட்டிங் :- 3.75/ 5.

தமிழ் திரைப்பட உலகில் சில சமயங்களில் வைரக்கல்லுக்கு நிகராக திரைப்படங்கள் வரும் அது எப்போதாவது ஒரு தடவைதான் வரும் ஆம் அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்தான் இந்த கிடா.

மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனுடைய தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் திரைப்படமாக “கிடா” உருவாகி உள்ளது.

மதுரை அருகே உள்ள கிராமத்தில் பூ ராமு, அவருடைய மனைவி மற்றும் பெற்றோர் விபத்தில் உயிரிழந்த எட்டு வயது பேரன் மாஸ்டர் தீபனை தாதா பூ ராமு அரவணைப்புடன் பார்த்து கொண்டு மலை அடிவாரத்தில் உள்ள விட்டில் வாழ்ந்து வருகிறார்.

தென்னை ஓலையில் கீற்று பின்னி அதில் வரும் வருமானத்தில் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் பூ ராமு.

தீபாவளி திருநாள் நெருங்க தனது தாதாவிடம் பேரன் மாஸ்டர் தீபன் எனக்கு தீபாவளிக்கு புது துணி வேண்டும் என கேட்க, அதை கண்டிப்பாக வாங்கித் தருவதாக பூ ராமு தனது பேரன் மாஸ்டர் தீபனுக்கு வாக்கு கொடுக்கிறார்.

இந்த நிலையில், பூ ராமு தன் பேரனுக்கு புது துணி வாங்க தனது கையில் பணமில்லாமல் பேரனுக்கு எப்படி புது துணி எடுத்து கொடுக்கப் போகிறேன் என மனதளவில் பூராமு வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்

கருப்புசாமிக்கு நேர்ந்து விட், தனது பேரன் ஆசை ஆசையாக தன் சகோதரன் போல் வளர்த்து வரும் கிடாவை பூ ராம் விற்க முயற்சி செய்து வருகிறார்.

அந்த கிடாவை ஒருவர் வாங்க வரும்போது அது கருப்புசாமிக்கு நேர்ந்து விட்ட கிடா என கூற வாங்க மறுத்து விடுகிறார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மறுபுறம், காளி வெங்கட் கோழி மற்றும் ஆடு கறி வெட்டிக் விற்பனை செய்யும் கடையில் வேலையை பார்த்து வருகிறார்.

காளி வெங்கட்க்கு மனைவி மற்றும் திருமண வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

பல வருடங்களாக வேலை பார்த்த கறிக்கடையில் முதலாளியின் மகனிடம் தகராறு ஏற்பட, காளி வெங்கட் உனது கடை எதிரில் சொந்தமாக தீபாவளி தினத்தில் கறி கடையை தொடங்குவதாக சவால் விடுக்கிறார்.

கறிக்கடை தொடங்குவேன் என சவால் விட்ட காளி வெங்கட் கடை வைப்பதற்கு ஆடு கிடா தேடி அலைகிறார்.

அந்த ஊரில் உள்ள ஆடு கிடா  விற்க்கும் அனைவரும் காளி வெங்கட்டை நம்பி ஆடு கொடுக்க மறுத்து விடுகிறார்கள்.

கடைசியாக, பூ ராமின் கருப்புசாமிக்கு நேர்ந்து விட்ட  ஆட்டை வாங்குவதாக கூறி முன் பணமாக 500 ரூபாய் கொடுத்து நான் வாங்கிக் கொள்கிறேன் என காளி வெங்கட் கூறிவிடுகிறார்.

ஆடு வாங்க பணம் குறையவே ஊர் மக்களிடம் கறிக்கான முன் பணத்தை வாங்கி ஆட்டை வாங்கி கடையை ஆரம்பித்து விடலாம் என நினைக்கிறார் காலி வெங்கட்.

தீபாவளி முதல் நாள் அன்று இரவு கிடாவை சில திருடர்கள் ஆட்டை திருடிச் சென்று விடுகின்றனர்.

தனது செல்ல பேரன் மாஸ்டர் தீபனுக்கு தீபாவளிக்கு புது துணி எடுத்து கொடுத்தாரா? கொடுக்கவில்லையா.

ஊர் மக்களிடம் குடிகாரன் என பெயர் வாங்கிய காளி வெங்கட் ஆடு வாங்கி கறி கடை தொழிலை தொடங்கினாரா? தொடங்கவில்லையா?

கருப்புசாமிக்கு நேர்ந்து விட்ட கிடாவை சில களவாணிகளால் திருடு போன கிடா திரும்பக் கிடைத்ததா? கிடைக்கவில்லையா?

அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் இந்த கிடா திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த கிடா திரைப்படத்தில் பூ ராம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பூ ராம் எந்த ஒரு திரைப்படத்தில் நடித்தாலும் தன் நடிக்கும்  கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் சிறப்பாக நடித்து விடுவார்.

இந்த கிடா திரைப்படத்திலும் கனக்கச்சிதமாக தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து முடித்திருக்கிறார்.

தனது செல்ல பேரன் கேட்டதற்காக, அவனுக்கு புது துணி எடுத்துக் கொடுக்க அவர் படும் பாடு  அனைத்தும் கண்முன்னே கொண்டு வந்து கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டாது.

பூ ராமுவின் மனைவியாக நடித்த பாண்டியம்மாளையும் நாம் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.

மிகப்பெரிய நடிகைகள் நடிக்க வேண்டிய காட்சியை மிகவும் எளிதாக நடித்து விட்டுச் சென்றிருக்கிறார்.

மது போதையில் தள்ளாடுவதும், திருந்தி வாழும் வைராக்கிய போராட்டமும் காளிவெங்கட்டை வெள்ளைச்சாமியாகவே கண்முன் நிறுத்திவிட்டார்.

‘அநீதி’ திரைப்படத்துக்குப் பிறகான மற்றொரு கிராமத்து கதாபாத்திரத்தில் முத்திரை பதித்து விட்டார் காலி வெங்கட்.

பேரனாக கதிர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் தீபனின் சிறப்பே அவரது மொழி. ‘ல’, ‘ழ’ உள்ளிட்ட அழுத்தம் கொடுக்கும் வார்த்தைகளை உச்சரிப்பின் வேகத்தில் கடந்து செல்லும் அவரின் தனித்துவ ஸ்லாங்கும், அப்பாவித்தன பாவனைகளும் ஒன்றுகூடுமிடத்தில் நாமே துணிவாங்கி கொடுத்திடலாம் என நினைக்க தோன்றுகிறது.

இறந்து போன தனது அம்மா அப்பாவின் புகைப்படங்களை பார்த்து அழும் காட்சியிலும், இறுதியில் ‘கருப்பே…..’ என கத்தும் காட்சியிலும் களங்கடிக்கும் நேர்த்தியான நடிப்பை உண்மையாக கொடுத்திருக்கிறார்.

க்ளைமாக்ஸ் காட்சியில் திருட்டுத் தனமாக முழித்துக் கொண்டு செய்யும் செயல், “அடேய் யாருடா நீ இந்த வயசுல இப்படி நடிக்கிறியே சூப்பர்டா” தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது மாஸ்டர் தீபன் என்று திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை பாராட்ட வைத்து விட்டார்.

கதிர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் தீபன், அழகாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் அருமையாக நடித்து விட்டார்.

இந்த கிடா திரைப்படத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட்டின் மனைவி, மகன், மகனின் காதலி, டீக்கடைக்காரர், காளி வெங்கட்டின் நண்பர், என திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை மிகக் கச்சிதமாக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

வெண் திரையில் வெயில் மனிதர்களையும், சூடேறிய நிலத்தையும், கிராமத்து அழகியலையும் காட்டும் ஒளிப்பதிவாளர் ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவில் வைடு ஆங்கிள் ஷாட்டும், ஓரிடத்தில் வரும் லோ – ஆங்கிளும் ரசனைமிகு ஃப்ரேம்கள்.

ஒளிப்பதிவாளர் ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவு தத்ரூபம். ஆட்டின் கண் அசைவு, ஆடு திருடர்களை பிடிக்கச் செல்லும் போது எடுக்கப்பட்ட காட்சி என ஆங்காங்கே குறிப்பிடும்படியான காட்சிகளை பலவற்றை படம் பிடித்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் ஆனந்த் ஜெரால்டின் ‘கட்ஸ்’ கதை சொல்லலை இன்னும் கச்சிதமாக்கியிருக்கிறது.

இரண்டு மணிநேரத்தில் மொத்த உணர்வுகளையும் கடத்த உதவியிருக்கிறார்.

இசையமைப்பாளர் தீசனின் இசை மனதை வருடியது.

நீரில் கரையும் உப்பைப்போல இசையமைப்பாளர் தீசனின் பின்னணி இசை காட்சிகளில் கரைந்து உணர்வுகளுக்கு உரமிட்டு வளரச்செய்கிறது.

மிக அழகான ஒரு வாழ்வியலை நமது கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் ரா வெங்கட்.

தீபாவளி ஒரு பது துணிக்காகவா இத்தனை போராட்டம் என்று கேட்க வைக்காமல், இந்த ஒரு புது துணிக்காகத்தான் இத்தனை போராட்டமும் என்று மனதிலும் கண்களிலும் பதிய வைத்துவிட்டார் இயக்குனர் ரா வெங்கட்.

இருப்பினும், திரையரங்கில் மொத்தமாக திரைப்படத்தையும் முடிந்து வெளியே வரும்போது சிலருக்கு காற்றில் பறக்கும் இறகைப் போல லேசான மனமும், சிலருக்கு கண்களில் ஈரம் காய்ந்த கண்ணீரும் இருக்கலாம்!

தமிழ் திரைப்பட உலகில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரா வெங்கட எங்களது மூவி வீங்ஸ் இணையதளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மொத்தத்தில் “கிடா” திரைப்படம் தமிழ் திரைப்பட உலகிற்கு பட்டை தீட்டப்பட்ட  வைரக்கல்.