பெப்சியின் பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம் மறைவு காரணமாக நாளை படப்பிடிப்புகள் போஸ்ட் புரொடக்ஷன் அனைத்து பணிகளும் ரத்து.

சென்னை 27 ஜூன் 2021

பெப்சியின் பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம் மறைவு காரணமாக நாளை படப்பிடிப்புகள் போஸ்ட் புரொடக்சன் அனைத்து பணிகளும் ரத்து

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும், கலை இயக்குனர் சங்கத்தின் தலைவருமான திரு அங்கமுத்து சண்முகம் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தி தமிழ்த் திரைப்பட உலகத்தினர் அதிர்ச்சியில் ஆழ்த்தியள்ளது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக மூன்று முறையும், பெப்சியின் பொருளாளாராக இரண்டு முறையும், கலை இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக பதினைந்து ஆண்டு காலம் மேலாக பதவி வகித்து வந்த அங்கமுத்து சண்முகம் இன்று காலை புற்றுநோய் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.

பிரபல கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் அவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை நடைபெற உள்ள படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்துமே ரத்து செய்யப்படுவதாக பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி அறிவித்துள்ளது.

அங்கமுத்து சண்முகம் அவர்கள் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர்.

தமிழ் திரைப்படம் தொழிலாளர்களின் போராட்டங்கள் சங்கங்களின் பிரச்சனைகள், படப்பிடிப்புத் தளங்களில் ஏற்படும் பிரச்சனைகள், தயாரிப்பாளர்கள் சங்கத்துடனான பேச்சுவார்த்தை, அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை என பல்வேறு பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் ஏற்பட உறுதுணையாக இருந்தவர் இன்று எத்தனையோ தொழிலாளர்களை கவலையில் ஆழ்த்திச் சென்றுவிட்டார்.

இவருடைய தந்தை கலை இயக்குநர் அங்கமுத்து அவர்கள் எம்ஜிஆரின் நம்பிக்கைக்குறியவராகவும் இருந்தவர்.

எம்ஜிஆர் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1972 ஆம் ஆண்டு துவங்கிய போது அதிமுக கொடியை வடிவமைத்து கொடுத்தவர் கலை இயக்குனர் அங்கமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

அவரும் கலை இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர்.

மேலும் அங்கமுத்து தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், திரைப்பட தொழிலாளர் சம்மேளத்தின் பொருளாளராகவும் பதவி வகித்தவர்.

மறைந்த அங்கமுத்து முதல்வர் கருணாநிதியின் வசனத்தில் வெளிவந்த அவன் பித்தனா, தங்கத் தம்பி ஆகிய திரைப்படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியவர்.

எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், நினைத்ததை முடிப்பவன் உள்பட 250 திரைப்படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

தன்னுடைய தந்தையின் வழியில் எளிமையான அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்த சண்முகம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர்.

இவருடைய மறைவுச்செய்தி அறிந்து சினிமா தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!