குரங்கு பெடல் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- காளிவெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், ராகவன், ஞானசேகர், சாய்கணேஷ், ரதிஷ், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், தக்ஷனா, சாவித்திரி, செல்லா, குபேரன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கமலக்கண்ணன்.

ஒளிப்பதிவாளர் :- சுமீ பாஸ்கரன்.

படத்தொகுப்பாளர்  :- சிவநந்தீஸ்வரன்.

இசையமைப்பாளர் :- ஜிப்ரான் வைபோதா.

தயாரிப்பு நிறுவனம் :- சிவகார்த்திகேயன் புரெடக்ஷனஸ்.

தயாரிப்பாளர்கள் :- சிவகார்த்திகேயன், சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன், சஞ்ஜய் ஜெயகுமார், கலையரசு.

1980-ல் கோடைக்கால விடுமுறையை சிறுவர்கள் எப்படி எல்லாம் கொண்டாடினார்கள் என்பதையும், அவர்களது வாழ்க்கைச் சூழல் மற்றும் அக்கால மனிதர்களின் வாழ்வியலை திரை மொழியில் பேசுவது தான் இந்த ‘குரங்கு பெடல்’ திரைப்படம்.

1980 கலக்கட்டங்களில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தில் உள்ள  ஐந்து சிறுவர்கள்  பள்ளியில் கோடை விடுமுறையை பல வழிகளில் கொண்டாடி தீர்க்கும் சிறுவர்கள் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

இதில் ஒரு சிறுவன் மட்டும் சைக்கிள் வாங்கிவிட மூன்று  சிறுவர்கள் சைக்கிள் வாங்கிய சிறுவனுடன் சேர்ந்து கோடை விடுமுறையில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

அதில் ஒரு சிறுவன் மட்டும் சொந்த சைக்கிள் இல்லாததால் வாடகை சைக்கிள் எடுத்து கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறான்.

சைக்கிள் ஓட்ட தெரியாத நடராஜா சர்வீஸ் ஆக இருக்கும் காளி வெங்கட், தனது மகனின் சைக்கிள் ஓட்டும் ஆசையை புரிந்துக் கொள்ளாமல் காசு கொடுக்க மறுத்து விடுகிறார்.

ஆனால், தான் எப்படியாவது சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் மனதளவில் உறுதியாக இருக்கும் அவரது மகன் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டாரா? கற்றுக் கொள்ளவில்லையா? என்பதுதான் இந்த குரங்கு பெடல் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த குரங்கு படம் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார்.

நடிகர் காளி வெங்கட் எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாலும், அதன் எதார்த்தையும் எந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதோ அந்த கதாபாத்திரமாகவே திரையில் மிக அழகாக கொண்டு வரக்கூடியவர்.

அப்படித்தான் இந்த குரங்கு பெடல் திரைப்படத்திலும் கந்தசாமி என்ற கிராமத்தில் நெசவு செய்யும் தொழிலாளியாக மிகவும் யதார்த்தமாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.

தனக்கு சைக்கிள் ஓட்ட தெரியாததால் தன்னை கிராமத்தில் உள்ள அனைவரும் நடராஜா சர்வீஸ் என்று கிண்டல் செய்வதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் அதன் வலியை ஒரு ஓரத்தில் வெளிப்படுத்தும் காட்சிகளிலும், தனது நிலையை சுட்டிக்காட்டி மகன் வசனம் பேசும் காட்சியிலும் தன்னை மவுனமாக வைத்துக் கொண்டு கைதட்டல் பெறுகிறார்.

இந்த குரங்கு பெடல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சிறுவர்கள் காளி வெங்கட்டின் மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், மாஸ்டர் ராகவன், மாஸ்டர் ஞானசேகர், மாஸ்டர் சாய் கணேஷ், மாஸ்டர் அதிஷ் ஆகியோர் உடல் மொழி, வசன உச்சரிப்பிலும் நடிப்பிலும் அனைத்திலும் கிராமத்து மண் வாசனை மாறாமல் சிறுவர்கள் அனைவரும் மிக அருமையாக நடித்திருக்கிறார்கள்.

மிலிட்டரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் குடிகாரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜென்சன் திவாகர் கொங்கு தமிழ் பேசி திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரையும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.

அதிலும், மிலிட்டரி என்று சொல்லிக் கொண்டு அந்த கிராமத்தில் கெத்தாக சுற்றிக் கொண்டிருக்கும் இருந்த பிரசன்னா பாலச்சந்திரன் மிலிட்டரி இல்லை என உண்மை தெரிந்ததும், ஜென்சன் திவாகர் அவரை வெளுத்து வாங்கும் காட்சிகள் அனைத்திலும் சிரிப்பு சரவெடியாக அமைந்திருக்கிறது.

சிறுவனின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தக்‌ஷனா, காளி வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் சாவித்திரி, வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செல்லப்பா, தோல் பாவை கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குபேரன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கொங்கு தமிழ் பேசி கொங்கு மாவட்ட கிராமத்து மனிதர்களாக நடிகர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுமீ பாஸ்கரனின் ஒளிப்பதிவு மூலம் கோடைக்காலத்தின் உள்ள வெப்பத்தையும், கிராமத்து உள்ள நீர் குளிர்ச்சியையும், புழுதி படர்ந்த நிலப்பரப்புகளையும் மிக நேர்த்தியாகவும் அருமையாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையில், பாடல்கள் மிக எளிமையான பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு வலிமை சேர்த்து திரைப்படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பன் அவர்களின் ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை மையமாக கொண்டு மிக அருமையான திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குனர் கமலக்கண்ணன் மற்றும் பிரபாகர் சண்முகம் சைக்கிள் ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு கிராமத்து உள்ள சிறுவர்களின் வாழ்வியலை உணர்வுப்பூர்வமாக பயணிக்க வைத்திருப்பதோடு, திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் சிறுவயதில் சைக்கிள் ஓட்டும் பழைய நினைவுகளை தட்டி எழுப்பி இருக்கிறார் இயக்குனர் கமலக்கண்ணன்.

சைக்கிள் மூலம் கதை சொன்னாலும், தந்தை – மகன் இடையிலான பாசப் போராட்டம், தந்தையின் சைக்கிள் ஓட்டுவதற்கு பயம், முறுக்கு சாப்பிடுவதற்காக திரைப்படம் பார்க்க சினிமா கொட்டகைக்கு செல்லும் சிறுவன் ஆகியவற்றின் மூலம் அந்தக் காலத்தில் கிராமத்து மக்களின் வாழ்வியலை மிக அழகாகவும், உணர்வுப்பூர்வமாகவும் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் கமலக்கண்ணன்.

ஒரு மிகவும் அமைதியான கிராமத்து மக்களின் வாழ்க்கையை கிராமத்து மக்கள் மட்டும் இன்றி நகரத்தில் வாழும் மக்களும் ரசிக்கும்படியாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் கமலக்கண்ணன்.

மொத்தத்தில், இந்த ‘குரங்கு பெடல்’ திரைப்படம் சுற்று எரிக்கும் கோடை வெயிலில் குடும்ப குடும்பமாக சென்றால் மிகவும் குளிர்ச்சியான அனுபவமாக இருக்கும்.

ரேட்டிங் 3.75/5

error: Content is protected !!